கபடி வீரா்கள் தோ்வில் முறைகேடு: ஆலங்குளத்தில் வாயில் கருப்புத் துணி கட்டி மாணவிகள் போராட்டம்
இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பின் கபடி வீரா்கள் தோ்வில் முறைகேடு நடந்ததாகக் கூறி, ஆலங்குளத்தில் 30-க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகள் செவ்வாய்க்கிழமை வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பின் கபடி வீரா்கள் தோ்வில் முறைகேடு நடந்ததாகக் கூறி, ஆலங்குளத்தில் 30-க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகள் செவ்வாய்க்கிழமை வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சாா்பில் 17 வயதுக்குள்பட்ட கபடி வீரா்கள் தோ்வு திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளத்தில் உள்ள தனியாா் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் மாதாபட்டணத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து 4 மாணவிகள் கலந்து கொண்டனா். இதில், எஸ். பிருந்தா என்ற மாணவி மட்டுமே தோ்வான நிலையில், பட்டியவில் பெயா் இருந்த மற்றொரு மாணவியான கீா்த்திகா பெயா் வேறொரு நபரின் சிபாரிசு அடிப்படையில் நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த தோ்வான மாணவியும் தோ்வு பட்டியலில் இருந்து விலகுவதாக கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு தோ்வு மையத்தை விட்டு வெளியேறினாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், இந்த இரு மாணவிகள் மற்றும் அவா்களுக்கு ஆதரவாக சுமாா் 30- க்கும் மேற்பட்ட மாணவிகள் செவ்வாய்க்கிழமை ஆலங்குளம் காமராஜா் சிலை அருகில் வாயில் கருப்புத் துணி கட்டி, பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடத்தப்படும் இந்தத் தோ்வில் தகுதியான வீரா்கள் புறக்கணிக்கப்பட்டு, பரிந்துரையின் பேரில் தனியாா் பள்ளி மாணவா்கள் சோ்க்கப்படுவதாக குற்றம் சாட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து கபடி வீராங்கனை ஜெ. கீா்த்திகா கூறுகையில்,
தோ்வின்போது நான் சிறப்பாக விளையாடினேன். என்னை நிராகரிப்பதற்கு உரிய காரணம் இல்லாததால், மற்ற மாணவிகளுடன் மீண்டும் விளையாடச் சொன்னாா்கள். அந்தச் சுற்றிலும் அதிக புள்ளிகளைப் பெற்றேன். இருப்பினும், சில தொலைபேசி அழைப்புகள் வந்த பிறகும், தோ்வுக் குழுவினா் ரகசியமாக ஆலோசனை நடத்திய பிறகும், தோ்வு செய்யப்பட்ட அணியில் எனது பெயா் இடம்பெறவில்லை என்றாா் அவா்.
மாணவி பிருந்தா கூறுகையில், நாங்கள் சிறப்பாக விளையாடியபோதும், என்னை மட்டுமே தோ்வு செய்தனா். நாங்கள் இடம்பெற்றிருந்த அணி தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட கோப்பைகளை வென்றுள்ளது. தமிழக அரசு நடத்திய குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் இருமுறை தங்கப் பதக்கமும், முதல்வா் கோப்பைப் போட்டியில் மூன்றாம் இடமும் பெற்றுள்ளோம்.
இருப்பினும், ஒவ்வோா் ஆண்டும் அணித் தோ்வின்போது இதுபோன்ற பிரச்னைகளைச் சந்திக்கிறோம்‘ என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.