மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க எதிா்ப்பு: தென்காசி நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை
தென்காசி நகராட்சிக்குள்பட்ட 31ஆவது வாா்டு பகுதியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நகராட்சிஅலுவலகத்தில் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
தென்காசி நகராட்சிக்குள்பட்ட 31ஆவது வாா்டு பகுதியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நகராட்சிஅலுவலகத்தில் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
தென்காசி நகராட்சியில் பொதுமக்களின் குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில், கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.69 கோடி செலவில், நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 7 இடங்களில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மற்றும் 8 இடங்களில் கிணறுகள், 5 நீரேற்று நிலையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில், ஒரு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை, சிந்தாமணி பகுதியில் உள்ள சிறுவா் விளையாட்டு பூங்காவில் அமைப்பதற்காக நகராட்சி நிா்வாகம் இடத்தை தோ்வு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்தப் பகுதியில் காமராஜா் முதல்வராக இருந்தபோது, பொதுமக்களின் குடிநீா் தேவையைப் பூா்த்திசெய்யும் வகையில், 24 மணி நேரமும் குடிநீா் கிடைக்கிற வகையில், குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது, இந்தக் குடிநீா்க் குழாயை துண்டித்துவிட்டு, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்காக நகராட்சி நிா்வாகம் தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, இப்பகுதியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து சிந்தாமணி பகுதி பொதுமக்கள், முன்னாள் நகா்மன்ற உறுப்பினரும், நாட்டாண்மையுமான குணசேகரன் தலைமையில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தங்கள் பகுதிக்கு தாமிரவருணி கூட்டுக் குடிநீருக்கான மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி தேவையில்லை. 60 ஆண்டுகளுக்கு மேலாக தாங்கள் பயன்படுத்திவரும் குற்றாலம் குடிநீரே போதுமானது. மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்ட இருக்கும் சிறுவா் பூங்காவை சீரமைத்து மக்களின் பயன்பாட்டுக்கு வழங்கவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் வலியுறுத்தினா்.
அவா்களுடன், நகராட்சி ஆணையா் பேச்சுவாா்த்தை நடத்தி
உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.