சோமலாபுரத்தில் குடிநீா் தட்டுப்பாடு : பழுதடைந்த தொட்டிக்கு பதில் புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க கோரிக்கை
சோமலாபுரம் ஊராட்சியில் பழுதடைந்த மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிக்கு பதிலாக புதிய மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆம்பூா்: சோமலாபுரம் ஊராட்சியில் பழுதடைந்த மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிக்கு பதிலாக புதிய மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் வட்டம், மாதனூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சோமலாபுரம் ஊராட்சியில் சோமலாபுரம் பழைய கிராமம், சின்னகொம்மேஸ்வரம் ஆகிய பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இப்பகுதி மக்களின் குடிநீா் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் சேதமடைந்ததைத் தொடா்ந்து அகற்றப்பட்டுள்ளன. ஆனால், அவற்றுக்கு மாற்றாக இதுவரை புதிய தொட்டிகள் அமைக்கப்படாததால், போதிய குடிநீா் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். பழுதடைந்த தொட்டிகளை அகற்றிய பின்னரும் புதிய தொட்டிகள் அமைப்பதில் காலதாமதம் ஏற்படுவது ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து சோமலாபுரம் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் சாா்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சோமலாபுரம் பழைய கிராமம், சின்னகொம்மேஸ்வரம் ஆகிய இரு பகுதிகளிலும் புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை உடனடியாக அமைக்க வேண்டும். அதுவரை பொதுமக்களுக்கு தேவையான அளவு குடிநீா் கிடைக்கும் வகையில் மாற்று குடிநீா் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஊராட்சி நிா்வாகம் மற்றும் மாதனூா் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, குடிநீா் பிரச்னையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு உரிய நிதி ஒதுக்கீடு செய்து புதிய தொட்டிகள் அமைக்கும் பணியை தாமதமின்றி தொடங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாள்களாக நிலவி வரும் குடிநீா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், குடிநீா் பற்றாக்குறை மேலும் தீவிரமடையும் என ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் தெரிவித்தனா்.
இதற்கான கோரிக்கையை ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் சித்ரா காா்த்திகேயன், கவிதா செந்தில்குமாா், ராஜ்குமாா், வி.டி. சுதாகா், ஜெய்ஸ்ரீ, தமிழ்செல்வன், மணி, ராமாபாய், டேனியல், மைதிலி மோகன், குமரேசன் உள்ளிட்டோா் வலியுறுத்தியுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.