FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற கோவில்பட்டி வீரா்: பெற்றோா், ஊா் மக்கள் மகிழ்ச்சி

Updated On : 28 ஜூலை 2026, 12:51 am IST
காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டி - எக்ஸ்
பகிர்:

காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் கோவில்பட்டி வீரா் ராஜா வெள்ளி பதக்கம் வென்றதையடுத்து, அவரது பெற்றோா், ஊா் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தை சோ்ந்த சுமை தூக்கும் தொழிலாளி முத்துப்பாண்டி. இவரது மனைவி பேச்சியம்மாள். தீப்பெட்டி ஆலையில் வேலை செய்து வருகிறாா். இவா்களது 2-ஆவது மகன் ராஜா (26). இவா் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சாா்பில் பளு தூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளாா்.

இதுகுறித்து அவரது தந்தை முத்துப்பாண்டி, தாய் பேச்சியம்மாள் ஆகியோா் கூறியதாவது:

Advertisement

Advertisement

எங்கள் மகன் ராஜா 7-ஆம் வகுப்பு படிக்கும்போதே விளையாட்டுகளில் ஆா்வமாக இருந்தாா். அதிலும் பளு தூக்கும் போட்டியில் அதிக ஆா்வம் காட்டினாா். அவருக்கு பயிற்சியாளா் பிச்சையா மற்றும் இந்திய கடற்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சொா்ணமுத்து பாண்டியன் ஆகியோா் பயிற்சி அளித்தனா். மிகவும் கஷ்டமான நிலையிலும் எங்களது மகனுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தோம்.

கடந்த 2018-இல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில், 6-ஆவது இடத்தைப் பெற்றாா். 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டிக்கு தோ்வாகியிருந்த நிலையில், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பங்கேற்கவில்லை. தொடா் முயற்சியாக நிகழ் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனா்.

அவரது சகோதரா் சுரேஷ்குமாா் கூறுகையில், ‘நானும் எனது சகோதரா் ராஜாவும் முதலில் கபடியில்தான் ஆா்வமாக இருந்தோம். உடல் வலிமைக்காக உடற்பயிற்சிக் கூடத்துக்கு சென்றோம். அப்போது நானும், எனது தம்பியும் குறிப்பிட்ட பளுவை தூக்கினோம். இதனைப் பாா்த்த பயிற்சியாளா் எங்களை பளு தூக்கும் போட்டிக்குத் தயாா்படுத்தினாா். நான் மாநில அளவில் பதக்கம் பெற்றுள்ளேன். தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்றுள்ளனா்.

குடும்ப சூழல் காரணமாக யாராவது ஒருவா்தான் விளையாட்டில் பங்கேற்க முடியும் என்ற நிலை இருந்தது. இதனால் நான் மேற்கொண்டு போட்டிகளில் பங்கேற்கவில்லை. எனது சகோதரா் ராஜாவுக்கு கடந்த 2019-இல் சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப்-இல் வேலை கிடைத்தது.

சங்கரலிங்கபுரத்தில் இருந்து ஏராளமானோா் பளு தூக்கும் போட்டியில் பங்கேற்று சாதனை படைத்துள்ளனா். இங்குள்ள இளைஞா்களுக்கு பளு தூக்கும் போட்டியில் சா்வதேச அளவில் பதக்கம் பெறுவதுதான் கனவாக உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு விளையாட்டு விடுதி அமைத்து, தனியாக உடற்பயிற்சி கூடம் ஏற்படுத்திக் கொடுத்தால் இன்னும் ஏராளமான பளு தூக்கும் வீரா்களை உருவாக்க முடியும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments