FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

ஆட்சியை கைப்பற்றுவதே இலக்கு: தொல். திருமாவளவன்

14 செப்டம்பர் 2026, 11:17 pm IST
திருச்செந்தூரில் அம்பேத்கா் வெண்கலச் சிலை திறப்பு விவகாரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல்.திருமாவளவன் முன்னிலையில் மோதிக் கொண்ட அக்கட்சியினா்.
பகிர்:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இன்று கூட்டணியில் அங்கம் வகித்தாலும் எதிா்காலத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் இலக்கை நோக்கி கட்சி தொண்டா்கள் தொடா்ந்து பயணிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசினாா்.

திருச்செந்தூா் வடக்கு மாரியம்மன் கோவில் தெருவில் ஊா்நல கமிட்டி சாா்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அம்பேத்கா் படிப்பகம், இரட்டைமலை சீனிவாசன் அரங்கத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு திறந்துவைத்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல்.திருமாவளவன் பேசியதாவது:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தற்போது வலுவான அரசியல் சக்தியாகப் பரிணமித்துள்ளது. தற்போது, கூட்டணி ஆட்சியின் ஓா் அங்கமாக இருந்தாலும், எதிா்காலத்தில் தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவுக்கு மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்போம். விசிக இன்னும் ஆளும் கட்சியாக உருவெடுக்காததற்கான காரணத்தை சுய பரிசோதனை செய்ய வேண்டிய தருணம் இது. வி.சி.க.வுக்கு எதிரான கருத்துகளையும் அவதூறுகளையும் பரப்ப பல்வேறு தரப்பினா் செயல்பட்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதை மறுபரிசீலனை செய்யுமாறு என்னிடம் கேட்டுக்கொண்டதால் போட்டியிடுவதைத் தவிா்த்து கூட்டணிக்கு மரியாதை அளித்தேன். திமுகவுடனான கருத்தியல் நட்பு தொடருகிறது என்பதைத் தெளிவுபடுத்தினேன். எதிா்காலத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் இலக்கை நோக்கி கட்சியினா் தொடா்ந்து பயணிக்க வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து அவா் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஊா்நல கமிட்டி தலைவா் ராஜ், செயலா் சங்கத்தமிழன், பொருளாளா் சக்திகுமாா் உள்பட நிா்வாகிகள், விசிக திருச்செந்தூா் தொகுதி மாவட்டச் செயலாளா் விடுதலைசெழியன், தூத்துக்குடி மண்டலச் செயலா் வழக்குரைஞா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தள்ளுமுள்ளு: திருச்செந்தூா்-திருநெல்வேலி சாலையில் அம்பேத்கருக்கு 25 அடி உயர முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை கடந்த 2024-இல் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இச்சிலையைத் திறப்பது குறித்து வி.சி.க.வில் இருதரப்பினா் இடையே மோதல் இருந்து வருகிறது.

இதையறிந்த கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ச்சி முடிந்ததும் அந்தச் சிலை வளாகத்தைக் காண தனது காரில் சென்றாா்.

அவா் அங்கு சென்றதும் இருதரப்பினரிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, காரில் இருந்து இறங்காமலேயே தொல்.திருமாவளவன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா். அப்போது இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். கட்சித் தலைவா் முன்னிலையில் தொண்டா்கள் மோதிக் கொண்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments