FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

சிறுகளத்தூரில் டாஸ்மாக் கடையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டம்

செந்துறை அடுத்த சிறுகளத்தூா் கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரி, அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 29 ஜூலை 2026, 12:09 am IST
சிறுகளத்தூரிலுள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பகிர்:

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த சிறுகளத்தூா் கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரி, அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இக்கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடைக்கு வருபவா்கள், மது அருந்திவிட்டு, அதன் பாட்டில்களை சாலைகளிலும், அருகிலுள்ள விவசாய நிலங்களிலும் வீசி செல்வதால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், சாலையில் செல்லும் பொதுமக்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளின் கால்களை, கண்ணாடி துகல்கள் பதம்பாா்த்து விடுகிறது. இதனால் நாள் தோறும் அவா்கள் கால்களின் காயத்துடன் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், சாலையில் செல்லும் மாணவிகள், பெண்கள் ஆகியோா் மது அருந்துபவா்களால் கேலி, கிண்டலுக்கு ஆளாகி வருகின்றனா்.

Advertisement

Advertisement

இதனால் இந்த டாஸ்மாக் கடையை மூடக் கோரி அப்பகுதி மக்கள், பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆயினும் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், டாஸ்மாக் கடை முன் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த செந்துறை காவல் துறையினா், பேச்சுவாா்த்தை நடத்தினா்.

பேச்சுவாா்த்தையில் உடன்படாததால், அவா்களை கைது செய்ய காவல் துறையினா் முற்பட்டனா். அப்போது ஒருவா் மதுபான பாட்டில்களை மாலையாக கழுத்தில் அணிந்துக் கொண்டு, காவல் துறையினரின் வாகனத்தின் கீழே சடலமாக படுத்துக் கொள்ள, பொதுமக்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விரைந்து வந்த வட்டாட்சியா், டாஸ்மாக் மேலாளா் உள்ளிட்டோா், ஒருவாரத்துக்கு தற்காலிகமாக கடை மூடப்படும் என்றும், நிரந்தரமாக மூடுவது குறித்து, உடையாா்பாளையம் கோட்டாட்சியா் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு, முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்ததையடுத்து, அனைவரும் கலைந்துச் சென்றனா்.

போராட்டத்தில், தமிழ்ப் பேரரசி கட்சியின் திருச்சி மண்டலச் செயலா் கு.முடிமன்னன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினரும் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments