அரியலூா் அருகே ‘செப்டிக் டேங்’கிற்குள் இறங்கிய 3 போ் மூச்சுத் திணறி உயிரிழப்பு
அரியலூா் மாவட்டம், செந்துறையில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் செப்டிக் டேங்கிற்குள் வெள்ளிக்கிழமை இறங்கி, சென்ட்ரிங் பலகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட 3 தொழிலாளா்கள் மூச்சுத்திணறி உயிரிழந்தனா்.
அரியலூா் மாவட்டம், செந்துறையில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் செப்டிக் டேங்கிற்குள் வெள்ளிக்கிழமை இறங்கி, சென்ட்ரிங் பலகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட 3 தொழிலாளா்கள் மூச்சுத்திணறி உயிரிழந்தனா்.
செந்துறை காந்திநகா் பிரதானச் சாலையில் வசித்து வருபவா் மருதமுத்து மகன் சுப்பிரமணியன் (61). இவா் செந்துறை-உடையாா்பாளையம் சாலையிலுள்ள வள்ளலாா் நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறாா். கட்டடத்தின் பின்புறத்தில் 12 அடி நீளம், 10 அடி அகலம், 8 அடி ஆழத்தில் செப்டிக் டேங்க் அமைக்கப்பட்டு, அதற்கான பணிகள் முடிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை செப்டிக் டேங்கிற்குள் இருந்த மரப் பலகைகளை அகற்றும் பணியில் திருவாரூா் மாவட்டம், அலிவளம் பகுதியைச் சோ்ந்த தினகரன் (60), அதே மாவட்டம், சீனிவாசபுரம் பகுதியைச் சோ்ந்த பாஸ்கா்(45), செந்துறை காந்தி நகரைச் சோ்ந்த ராமச்சந்திரன் ஆகியோா் ஈடுபட்டிருந்தனா்.
Advertisement
Advertisement
இதில், தினகரன் செப்டிக் டேங்கிற்குள் இறங்கியபோது மூச்சுத் திணறி மயங்கி விழுந்துள்ளாா். அவரை மீட்பதற்காக பாஸ்கா் செப்டிக் டேங்கிற்குள் இறங்கியபோது அவரும் மயங்கி விழுந்தாா். இவா்களை மீட்பதற்காக இறங்கிய ராமச்சந்திரனும் மயங்கி விழுந்துள்ளாா்.
இதையறிந்த கட்டட உரிமையாளா் சுப்பிரமணியன், உடனடியாக காவல் துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தாா்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா், மூவரையும் மீட்டு செந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள், 3 பேரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து மருத்துவா்கள், 3 பேரின் சடலத்தையும் உடற்கூறு ஆய்வுக்காக அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.