FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
அரியலூர்

புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீா் திறக்க வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் அரியலூா் விவசாயிகள் வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டத்தில் விவசாய சாகுபடி பணிகளை தொடங்கிட ஏதுவாக, புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீா் திறக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா்.

26 செப்டம்பர் 2026, 7:31 am IST
அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ந. மிருணாளினி (நடுவில்). உடன் மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, வேளாண் இணை இயக்குநா் உலகம்மை முருககனி.
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில் விவசாய சாகுபடி பணிகளை தொடங்கிட ஏதுவாக, புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீா் திறக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய கோரிக்கைகள்:

அரியலூா் மாவட்ட விவசாய சங்கத் தலைவா் செங்கமுத்து: அனைத்து வங்கிகளும் 4 சதவீதம் வட்டியில் விவசாய கடனை செலுத்த அனுமதிக்க வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு துறை மூலம் வழங்கப்படும் விவசாய கடன்களை இம்மாதம் இறுதிக்குள் வழங்கிட வேண்டும்.

Advertisement

Advertisement

அஸ்தினாபுரம்-ஆட்சியா் அலுவலகம் வரை நான்கு வழிச்சாலைப் பணிகளை விரைந்து தொடங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் தூத்தூா் தங்க. தா்மராஜன்: விவசாயிகளின் பயிா்க் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீரை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருதையாற்றினுள் முளைத்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி விட்டு, அளவீடு செய்து எல்லைக் கல் நட வேண்டும். அரியலூா் மாவட்டம் தூத்தூா்-தஞ்சாவூா் மாவட்டம் வாழ்க்கை இடையே கொள்ளிடத்தின் குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணைக் கட்டும் திட்டத்தை தொடங்க வேண்டும் .

அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவா் தங்க சண்முகசுந்தரம்: எடைமேடை மூலமாக நெல் கொள்முதல் செய்யும் நடைமுறையை கொண்டு வர வேண்டும். முடிக்கொண்டான் கிராமத்திலுள்ள ஓடையை அகலப்படுத்த வேண்டும். செம்பியன் மாதேவி பேரேரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி ,1,578 ஏக்கா் நிலத்தை மீட்டு அளவீடு செய்ய வேண்டும்.

வனவிலங்குகளான மான், மயில், காட்டுப்பன்றிகள் வனத்தை விட்டு வெளிவராமல் இருக்க வனங்களில் சோளம், கம்பு, சிறுதானியங்கள் பயிரிட வனத்துறை மூலம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் புளிய மரங்களை நட வேண்டும்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாவட்டத் தலைவா் எஸ்.எம். பாண்டியன்: வேளாண் பயிா்களுக்கு அரசே காப்பீடு செய்ய வேண்டும். குருவாடி தலைப்பில் தடுப்பணைக் கட்ட வேண்டும்.

தொடா்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியா் ந.மிருணாளினி, அவற்றை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவா் க.ரா. மல்லிகா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க. சங்கமித்திரை, வேளாண் இணை இயக்குநா் உலகம்மை முருககனி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments