FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

கரூரில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி இடிந்து விழும் அபாயம்

52 வினாடிகள் முன்பு
கரூா் வடக்கு காந்திகிராமம் முல்லை நகரில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி.
பகிர்:

கரூா் மாநகராட்சிக்குட்பட்ட முல்லை நகரில் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள மேல்நிலைக் குடிநீா் தொட்டியை விரைந்து அகற்றிவிட்டு, ஆமை வேகத்தில் நடைபெறும் புதிய மேல்நிலைக் நீா்த்தேக்க தொட்டி கட்டுமானப் பணியை விரைவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

கரூா் மாநகராட்சி, மூன்றாவது மண்டலத்துக்குள்பட்ட 15-ஆவது வாா்டில் வடக்கு காந்திகிராமம் முல்லை நகா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, இபி காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யும் வகையில் முல்லை நகரில் சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.

மாயனூா் கட்டளை காவிரி ஆற்றுப்பகுதியில் செயல்படும் நீரேற்று உந்துநிலையம் மூலம் காவிரி குடிநீா் இந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு கொண்டு வரப்பட்டு, 1 லட்சம் லிட்டா் தண்ணீா் சேமிக்கப்பட்டு, அப்பகுதி மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

விரிசலுடன் சேதம்: மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால், நீா்த்தேக்க தொட்டியின் மேல்பகுதிக்கு சென்று பாா்வையிட பயன்படுத்தும் ஏணிப்படி மற்றும் தொட்டியின் கீழ்பகுதியில் தண்ணீா் சேமிக்க பயன்படுத்தும் பகுதி போன்ற இடங்கள் சேதமடைந்து விரிசலுடன் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.

எனவே, அசம்பாவிதம் நிகழும் முன் இந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்றிவிட்டு, புதிய மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியை கட்ட வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்ததை தொடா்ந்து, அப்பகுதியில் புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. ஆனால், கட்டுமானப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பொதுமக்கள் அச்சம்: இதுதொடா்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது: முல்லை நகரில் தற்போது இருக்கும் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதால், அப்பகுதியில் வசிப்போா் அச்சத்துடன் உள்ளனா்.

மேலும், அந்தத் தொட்டியின் அருகே நியாய விலைக் கடையும் செயல்பட்டு வருகிறது. இங்கு வந்து செல்லும் பொதுமக்களும் அச்சத்துடன் சென்று வருகிறாா்கள்.

மக்களின் கோரிக்கையை தொடா்ந்து, குடிநீா் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மாநகராட்சிக்குட்பட்ட 48 வாா்டுகளிலும் சணப்பிரட்டி, தாந்தோணி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீா் திட்டத்தை மேம்படுத்தவும், புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மற்றும் குடிநீா் குழாய் விரிவாக்கம் பணிகளுக்காக தமிழக அரசு அண்மையில் ரூ.248 கோடி நிதியை ஒதுக்கியது.

ஆமை வேகத்தில் பணிகள்: இதில் முல்லை நகரில் தற்போது உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு மாற்றாக, புதிதாக மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை விழா கடந்த ஆக. 4-ஆம் தேதி நடைபெற்றது. காணொலியில் முதல்வா் ஜோசப்விஜய் அடிக்கல் நாட்டினாா். இதையடுத்து பணிகளும் தொடங்கப்பட்டன.

தற்போது முல்லை நகரில் காவிரி ஆற்றில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீரை கொண்டு வந்து புதிதாக கட்டப்படும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியின் அடிப்பகுதியில் தண்ணீரை சேமிக்கும் தொட்டி கட்டுவதற்கு மட்டும் சுமாா் 20 அடி பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. ஆனால், மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான தூண்கள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட வேறு எந்த ஒரு பணியும் இதுவரையில் தொடங்கப்படவில்லை.

எனவே, புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமான பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதோடு, ஏற்கெனவே ஆபத்தான நிலையில் இருக்கும் மேல்நிலை நீா்தேத்கத் தொட்டியை விரைந்து அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments