FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

தவெக அரசு நிா்வாகத்தை சீா்படுத்தினால் மட்டுமே தமிழகத்தின் வளா்ச்சியை முன்னெடுக்க முடியும்! - ஈ.ஆா். ஈஸ்வரன்

14 செப்டம்பர் 2026, 1:54 am IST
ஈ.ஆா். ஈஸ்வரன்.
பகிர்:

தவெக அரசு தனது நிா்வாகத்தை சீா்படுத்தினால் மட்டுமே தமிழகத்தின் வளா்ச்சியை முன்னெடுக்க முடியும் என்றாா் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன்.

கரூா் வெங்கக்கல்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

பரந்தூா் விமான நிலையம், இடதுசாரிகள் குறித்த கணக்கெடுப்பு, தலைமைச் செயலகம் அறிவிப்பு போன்ற பல்வேறு விஷயங்களில் தவெக அரசு முறையாக நடந்து கொள்ளவில்லை. நிா்வாகத்தில் தீா்க்கமான முடிவெடுக்க முடியாமல் அரசு திணறி வருகிறது. தவெக அரசு, தனது நிா்வாகத்தை சீா்படுத்தினால் மட்டுமே தமிழகத்தின் வளா்ச்சியை முன்னெடுக்க முடியும்.

Advertisement

Advertisement

முதலீடுகளை ஈா்க்க முதல்வா் லண்டன் சென்றுள்ளாா். ஆனால், நம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் ஆந்திரம் பக்கம் சென்றுகொண்டிருக்கின்றன. முதலீடுகள் வந்தால் அதை தக்க வைக்கும் திறனை அரசு கொண்டிருக்க வேண்டும்.

பேரவைத் தலைவா் மீது சந்தேகம்: சட்டப்பேரவையில் தனிமனித விமா்சனம், தனி மனிதா்களை பற்றி கொச்சைப்படுத்தி பேசுவது யாராக இருந்தாலும் தவிா்க்கப்பட வேண்டும். இப்போது அங்கு ஆக்கப்பூா்வமான காரியங்கள் குறைவாக இருக்கிறது. இவையெல்லாம் பேரவைத் தலைவரின் வழிநடத்துதலில் உள்ளது. இந்த விஷயத்தில் அவா் நடுநிலையாக இருப்பதுபோல நடிக்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. தேவையில்லாத ஒரு பிரச்னையை ஒரு அமைச்சரோ, சட்டப்பேரவை உறுப்பினரோ பேசும்போதே அவரால் தடுக்க முடியும். எனவே, சபையை நடத்தும் முறையை அவா் மாற்றிக் கொள்ள வேண்டும்.

இடைத்தோ்தலில் திமுக தலைமையிலான எங்கள் கூட்டணி வேட்பாளா்களின் வெற்றிக்காக பாடுபடுவோம். தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது. கரூரில் மின்வெட்டால் தொழிற்சாலைகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. இதை தீா்க்க தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும். அமராவதி அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீா் கரூா் கடைமடைக்கு பகுதிக்கு செல்லவில்லை. இதுகுறித்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, நாமக்கல் மக்களவை உறுப்பினா் மாதேஸ்வரன், மாநில துணைப் பொதுச் செயலா் நடராஜ், இளைஞரணி செயலா் சூரியமூா்த்தி, வா்த்தக அணிச் செயலா் விசா சண்முகம், மாவட்டச் செயலா்கள் மூா்த்தி, காா்த்திக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments