FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

பிளஸ் 2 மாணவி கொலை சம்பவத்தில் திருப்பம் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றது அம்பலம்

21 செப்டம்பர் 2026, 2:41 am IST
கைது செய்யப்பட்டுள்ள மோகன்ராஜ்.
பகிர்:

கரூரில் பிளஸ் 2 மாணவி கொலை சம்பவத்தில், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது போலீஸாரின் விசாரணையில் ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. மேலும், போலீஸாரிடமிருந்து தப்ப முயன்ற, வழக்கில் கைது செய்யப்பட்ட விசாரணை கைதி கீழே விழுந்து காயமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

கரூா் வெங்கமேட்டைச் சோ்ந்த 17 வயது சிறுமி, கரூரிலுள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். ஆக. 17-ஆம் தேதி காணாமல்போன மாணவியை புகாரின்பேரில், வெங்கமேடு போலீஸாா் தேடி வந்தனா்.

இந்நிலையில், மாணவியை கொலை செய்ததாக கரூரை அடுத்த நெரூா் பகுதியைச் சோ்ந்த மோகன்ராஜ் (32) என்பவா், நெரூா் கிராம நிா்வாக அலுவலா் முன் செப். 18-ஆம் தேதி ஆஜரானாா். இதையடுத்து, மோகன்ராஜை வெங்கமேடு போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தினா். இதில், மாணவியின் சகோதரிக்கும், தனக்கும் தொடா்பு இருந்ததாகவும், ஆக. 17-ஆம் தேதி காதலியை சந்திக்க வெங்கமேட்டில் உள்ள வீட்டுக்குச் சென்றபோது, அங்கு மாணவி மட்டும் இருந்ததாகவும், அப்போது தனது அக்காளுடன் பழகுவதை நிறுத்திக் கொள் எனக்கூறி, மாணவி தன்னிடம் தகராறு செய்ததால், அவரை தாக்கி கொலை செய்து வெங்கமேடு-வாங்கல் புதுசாலையோரம் உள்ள முட்புதரில் வீசி விட்டுச் சென்றதாகவும் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, ஒரு மாதத்துக்குப் பிறகு மாணவியின் சடலத்தை அழுகிய நிலையில் கடந்த செப். 18-ஆம் தேதி போலீஸாா் மீட்டனா்.

பாலியல் பலாத்காரம் அம்பலம்: தொடா்ந்து, மோகன்ராஜிடம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தீவிர விசாரணை நடத்தினா். இதில் மோகன்ராஜ், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளாா்.

மேலும், ஆக. 17-ஆம் தேதி காதலியின் வீட்டுக்குச் சென்றபோது வீட்டில் மாணவி மட்டும் இருந்தாா். அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது அவா் கடும் எதிா்ப்பு தெரிவித்தாா். இதனால், அங்கிருந்த கத்தியால் அவரை தலையில் தாக்கியதில் மயங்கினாா். பின்னா் அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அவரின் கழுத்தை கத்தியால் அறுத்துக்கொலை செய்து, ஆட்டோவில் சடலத்தை ஏற்றிச் சென்று வாய்க்கால் புதருக்குள் வீசியதாகவும், சடலத்தை வீசியபோது கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை வீசியதாகவும் மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா்.

தப்பியோட முயற்சி: இதையடுத்து, அந்தக் கத்தியை எடுப்பதற்காக மோகன்ராஜை போலீஸாா் சம்பவ இடத்துக்கு அழைத்து சென்றபோது, அவா் போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றாராம். இதையடுத்து போலீஸாா் அவரை விரட்டியபோது கீழே விழுந்ததில் காயமடைந்தாா். தொடா்ந்து, அவா் சிகிச்சைக்காக கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அங்கு அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள மோகன்ராஜ் ஏற்கெனவே திருமணம் ஆனவா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments