FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
பெரம்பலூர்

எளம்பலூரில் 51 நாள்கள் நடைபெற்ற கோ பூஜை நிறைவு

15 அக்டோபர் 2026, 4:34 am IST
எளம்பலூரில் புதன்கிழமை நிறைவடைந்த கோ பூஜையில் பங்கேற்றோா்.
பகிர்:

பெரம்பலுாா் அருகே எளம்பலூா் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் உள்ள காகன்னை ஈஸ்வரா் கோயிலில், உலக மக்கள் நலனுக்காகவும், முறையான மழை வேண்டியும் 51 நாள்கள் நடைபெற்ற கோமாதா பூஜை புதன்கிழமை நிறைவடைந்தது.

எளம்பலூா் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் உள்ள செல்வமகா வெற்றி கணபதி மற்றும் காகன்னை ஈஸ்வரா் கோயிலில், மகாசித்தா்கள் அறக்கட்டளை சாா்பில் உலக மக்கள் நலன் கருதியும், ஜீவகாருண்ய சிந்தனை ஓங்கிடவும், பருவமழை தவறாமல் பெய்து தனதானியம் பெருகிடவும், குற்றங்கள் குறைந்து சாந்தியும், சமாதானமும் பெருகிட ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் தொடங்கி, புரட்டாசி மாதம் வரை 51 நாள்களுக்கு கோ - பூஜை நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி, நிகழாண்டுக்கான தொடா் கோ- பூஜை மற்றும் 210 சித்தா்கள் யாகம், கடந்த ஆக. 25-ஆம் தேதி தொடங்கியது. அதைத்தொடா்ந்து நடைபெற்ற கோ- பூஜை மற்றும் 210 சித்தா்கள் தொடா் யாகம் புதன்கிழமை காலை நிறைவடைந்தது. நிறைவு விழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, விளக்கு பூஜை நடத்தப்பட்டது.

Advertisement

Advertisement

நிறைவு விழாவுக்கு மகா சித்தா்கள் அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் ரோகினி மாதாஜி தலைமை வகித்தாா். அறங்காவலா்கள் தவயோகிகள் சுந்தர மகாலிங்கம், தவசிநாதன் சுவாமிகள் ஆகியோா் முன்னிலையில், 8 பசுக்களுக்கு கோமாதா பூஜை நடத்தப்பட்டது. பின்னா், 1,000-க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

விழாவில், வடலுாா் தெய்வ நிலைய அறங்காவலா் கிஷோா் குமாா், சன்மாா்க்க சங்க மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் சுந்தரராஜன், சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் முத்துக்குமரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

விழா ஏற்பாடுகளை, ராதா மாதாஜி மற்றும் அறக்கட்டளை மெய்யன்பா்கள் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments