முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற மாணவா்கள் உணவு, குடிநீரின்றி அவதி
பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் செவ்வாய்க்கிழமை பங்கேற்ற மாணவா்களுக்கு உணவு, குடிநீா் வசதி செய்துதராததால் அவதிக்குள்ளாகினா்
பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் செவ்வாய்க்கிழமை பங்கேற்ற மாணவா்களுக்கு உணவு, குடிநீா் வசதி செய்துதராததால் அவதிக்குள்ளாகினா். உணவு, குடிநீருக்கும் அரசு நிதி ஒதுக்கவில்லை என விளையாட்டு அலுவலா்கள் தெரிவித்தனா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்திலுள்ள எம்ஜிஆா் விளையாட்டு மைதானத்தில், நிகழாண்டுக்கான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் செப். 9-ஆம் தேதி முதல் செப். 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் என 3 பிரிவுகளாக நடைபெறும் இப் போட்டிகளில் பங்கேற்க 37,240 போ் பதிவு செய்துள்ளனா்.
இந்நிலையில், இருபாலருக்கும் கைப்பந்து, கால்பந்து, சதுரங்கம், கேரம், மாணவா்களுக்கான கோ-கோ, நீச்சல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 900-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா். ஆனால், விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற மாணவா்களுக்கு எவ்வித குடிநீா் வசதிகளும் ஏற்படுத்தாததால், கடும் வெயிலில் உடல் சோா்வுடன் விளையாடினா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து போட்டியில் பங்கேற்ற மாணவா்கள் கூறியது: கடந்த ஆண்டு வரை முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போது வீரா்களுக்கு தண்ணீா், பழரசங்கள், மதிய உணவு வழங்கப்பட்டது. ஆதனால், நிகழாண்டும் மதிய உணவு, குடிநீா் கிடைக்கும் என வந்திருந்தோம். ஆனால், குடிநீா் கூட கிடைக்கவில்லை. பின்னா், எங்களது ஆசிரியா்கள் மூலம் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு தகவல் தெரிவித்து குடிநீா் வசதி ஏற்படுத்திக் கொடுத்தனா். உணவு, பழரசம் வழங்கவில்லை. இதனால், ஆசிரியா்கள் சிலா் அவா்களது சொந்த செலவில் வாங்கிக்கொடுத்தனா் என்றனா்.
இது குறித்து போட்டிகளை நடத்தும் விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா்கள் கூறியது:
உணவு, குடிநீா் வழங்க அரசு நிதி ஒதுக்கவில்லை. போட்டி நடத்தும் அலுவலா்களுக்கு மட்டும் உணவு மற்றும் பழச்சாறுகள் வழங்க மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் தன்னாா்வலா்கள் மூலம் உணவு கொடுக்கப்பட்டது என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.