கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்ல வாய்க்கால் கரைகளை பலப்படுத்த வேண்டும்
புதுக்கோட்டை மாவட்ட கடைமடைப் பகுதிகளில் வாய்க்கால் கரைகளை பலப்படுத்தி தண்ணீர் திறக்க வேண்டும் என்றார் தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் வே.துரைமாணிக்கம்.
புதுக்கோட்டை மாவட்ட கடைமடைப் பகுதிகளில் வாய்க்கால் கரைகளை பலப்படுத்தி தண்ணீர் திறக்க வேண்டும் என்றார் தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் வே.துரைமாணிக்கம்.
புதுக்கோட்டை மாவட்டத்துக்குள்பட்ட மேற்பனைக்காடு, வேம்பங்குடி, ஆயிங்குடி, வல்லவாரி, அரசர்குளம், மன்னகுடி, நாகுடி, வேட்டனூர், நிலையூர், மும்பாலை உள்ளிட்ட பகுதிகளை ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்ட அவர் நாகுடியில் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டி: மேட்டூரில் இருந்து விவசாயத்துக்காக கடந்த ஜூலை 19ஆம் தேதி தண்ணீர் திறந்து ஒரு மாதமாகியும், தஞ்சை, புதுகை மாவட்டத்தின் கடைமடைப் பகுதிகளுக்கு போதிய நீர் வரவில்லை என்பது வேதனைக்குரியது.
கல்லணையிலிருந்து வெண்ணாறு, வெட்டாறுகளில் அதிகப்படியான தண்ணீர் திறந்து விடப்படாமல் கொள்ளிடத்தில் உபரி நீர் திறக்கப்படுவதால் 1 லட்சம் கன அடி நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. அதிகப்படியான தண்ணீர் திறக்கப்படாததற்கு காவிரிக் கரைகளை பலப்படுத்தாததே காரணமாகும்.
இதற்கிடையில், கல்லணையில் திறந்து விடப்பட்ட தண்ணீரால், தஞ்சை மாவட்டத்தில் உடைப்பு ஏற்பட்டதால் நீர் திறப்பு நிறுத்தப்பட்டு அடைக்கும் பணிகள் நடைபெற்றது. அதன்பிறகு, பொதுப்பணித்துறை அதிகாரிகளால் குறிப்பிட்ட அளவு மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கால்வாய்களில் உடைப்பு ஏற்படும் என்பதால் குறைவாக திறக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதனால், கடைமடைப் பகுதிகளான ஆலங்குடி, அறந்தாங்கி, மணமேல்குடி உள்ளிட்ட வட்டங்களில் 500க்கும் மேற்பட்ட ஏரி, ஆயிரத்திற்கும் அதிகமான குளங்களில் நீர் சேமிக்க முடியாமல் போய்விட்டது.
இனியாவது, போர்க்கால அடிப்படையில் கால்வாய்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீரமைத்து 4 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட்டால் இப்பகுதிகள் பாசனவசதி பெறுவதோடு, ஏரி, குளங்களில் போதுமான அளவு தண்ணீரை சேமிக்க முடியும். இந்த விவகாரத்தில், அரசும், அதிகாரிகளும் அலட்சியம் காட்டினால் அனைத்து விவசாயிகளை திரட்டி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றார். மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் மு.மாதவன், துணைச் செயலாளர் ஆ.ராஜேந்திரன், திருவரங்குளம் ஒன்றியச் செயலாளர் சொர்ணகுமார், காவிரி பாசன கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் பழ.சுப்பையா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.