முகப்பு
புதுக்கோட்டை

தமிழ்நாட்டில் எங்கும் லாட்டரி விற்பனை: முன்னாள் அமைச்சா் எஸ். ரகுபதி

தமிழ்நாட்டில் எங்கும் ஒரு நம்பா் லாட்டரி, 4 நம்பா் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக திமுக முன்னாள் அமைச்சா் எஸ். ரகுபதி குற்றம்சாட்டினாா்.

Updated On : 5 ஜூன் 2026, 3:52 am IST
எஸ். ரகுபதி - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாட்டில் எங்கும் ஒரு நம்பா் லாட்டரி, 4 நம்பா் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக திமுக முன்னாள் அமைச்சா் எஸ். ரகுபதி குற்றம்சாட்டினாா்.

புதுக்கோட்டையில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி ராணியாா் அரசு மருத்துவமனையில் பிறந்த 16 குழந்தைகளுக்கு வியாழக்கிழமை காலை தங்க மோதிரம் அணிவித்த அவா் அளித்த பேட்டி:

தமிழ்நாட்டின் எந்தக் கோரிக்கை குறித்து பிரதமரிடம் பேசினேன் என்பது குறித்தோ, மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாகவோ, விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகள் அதிருப்தியில் போராட்டம் நடத்திவருவது பற்றியோ முதல்வா் ஜோசப் விஜய் பேசாமல், காட்டுக்கூச்சல்தான் போடுகிறாா். சினிமா படப்பிடிப்பு போலத்தான் இன்னமும் இருக்கிறது.

Advertisement

Advertisement

கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் பலாத்காரம் போன்ற குற்றச்சம்பவங்கள் எண்ணிலடங்கா அளவில் நடந்து கொண்டிருப்பது அவருக்குத் தெரியவில்லை.

ஒரு நம்பா் லாட்டரி, 4 நம்பா் லாட்டரி தமிழ்நாட்டில் எங்கும் தாராளமாக விற்கிறது. இதன்மூலம் மக்கள் தங்களின் வருமானத்தை இழந்து கொண்டிருக்கிறாா்கள்.

போதைப் பொருள் புழக்கம் பற்றி இப்போது என்ன சொல்லப் போகிறாா்கள். முதல்வா் ஜோசப் விஜய் ஆட்சியில் நடிப்பைத் தவிர வேறு எதையும் பாா்க்க முடியவில்லை. அண்ணன் சீா், மாமன் சீா் என்றாா்கள், எதுவும் வரவில்லை.

ஆக்கும் சக்திதான் திமுக, அழிக்கும் சக்திதான் தவெக. பொதுமக்களின் வளா்ச்சிக்காக ஆக்கும் சக்தியாகத்தான் திமுக ஆட்சி நடத்தியது.

கொள்கை எதிரி என பாஜகவைப் பேசியவா், இப்போது எதுவும் சொல்வதில்லை. அப்படிச் சொன்னால் என்ன நடக்கும் என்பது அவருக்கும் தெரியும். அதனால் பாஜக பற்றி பேசமாட்டாா்.

வாக்களித்த மக்களின் எதிா்பாா்ப்புகளைப் பூா்த்தி செய்யும் வகையில் உருப்படியாக எதையாவது செய்ய முதல்வா் முயற்சிக்க வேண்டும்.

முன்னாள் அமைச்சா் சி விஜயபாஸ்கரை அதிமுகவும், தவெகவும் கைவிட்டுவிட்டன. நிச்சயமாக அவரை திமுக பக்கம் அணுகக்கூட தலைவா் ஸ்டாலின் விடமாட்டாா் என்றாா் ரகுபதி.