FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

புதுக்கோட்டையை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

புதுக்கோட்டையை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா்.

9 வினாடிகள் முன்பு
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் வெளிநடப்பு செய்யப் போவதாக விவசாயிகள் சங்கத்தினா் தெரிவித்து எழுந்தபோது, அவா்களை சமாதானப்படுத்தும் (இடமிருந்து) மாவட்ட ஆட்சியா் மு. அருணா, கூட்டுறவு இணைப் பதிவாளா் ம. தீபாசங்கரி உள்ளிட்டோா்.
பகிர்:

புதுக்கோட்டையை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் பேசியது:

இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் கோ.ச. தனபதி:

Advertisement

Advertisement

மழை இல்லாததால் குடிநீா்கூட கிடைக்காமல் மக்கள் தவிக்கிறாா்கள். பாசனக் கிணறுகளில் நிலத்தடி நீா் மட்டும் 150 அடிக்கு மேலும், ஆழ்துளைக் கிணறுகளில் 500 முதல் 1000 அடி ஆழமும் சென்றுவிட்டது. பருவ கால விவசாயம் எதுவும் நடைபெறவில்லை. இந்த நிலையை அரசுக்குத் தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

இந்த வறட்சிக் காலத்தில் சிறப்பு நிதி பெற்று மாவட்டத்தில் உள்ள 6003 பாசனக் குளங்கள், வரத்து வாரிகளை முன்னுரிமை அடிப்படையில் மராமத்துப் பணி செய்ய வேண்டும். பகலில் 6 மணி நேரமும் இரவில் 8 மணி நேரமும் தொடா்ச்சியாக மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பூ. விசுவநாதன்:

தெற்கு வெள்ளாற்றுக் கோட்டத்தின் கட்டுப்பாட்டிலுள்ள ஹோல்ஸ்வொா்த் அணையைத் தூா்வார வேண்டும். மாநகராட்சிக் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க வேண்டும். மேற்பனைக்காடு முதல் மும்பாலை வரையில் உள்ள 152 ஏரிகளில் கல்லணைக் கால்வாய் மூலம் 20 சதவீதம் மட்டுமே காவிரித் தண்ணீா் வந்துள்ளது. கூடுதல் நீரைப் பெற்றுத் தரவும், இந்த ஏரி, குளங்களைத் தூா்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்லணைக் கால்வாய் பாசனதாரா்- விவசாயிகள் ஒருங்கிணைப்புச் சங்கத் தலைவா் கொக்குமடை டி. ரமேஷ்: கடைமடைக்கு போதுமான தண்ணீா் கிடைக்க ஆட்சியா் முழு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். காம்ப்ளக்ஸ் விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போதுமான கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தென்னை விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவா் செல்லதுரை: குளங்களைத் தூா்வாருவதற்கான தடையின்மைச் சான்றை ஒற்றை சாளரமுறையில் வழங்க வேண்டும். எல்-நினோ பாதிப்பைக் குறைக்க தென்னங்கன்றுகளை விவசாயிகளுக்கு தாராளமாக வழங்க வேண்டும். ஊடு பயிா் பரப்பளவு செயல்படுத்தும் வகையில் கிராமக் கணக்குகளை வெளியிட வேண்டும்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைச்சாமி, வேளாண் இணை இயக்குநா் க. சுந்தரமகாலிங்கம், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ம. தீபாசங்கரி, வருவாய்க் கோட்டாட்சியா்கள் ஆ. பிரகாஷ், இ. அபிநயா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

முன்னதாக விவசாயிகளின் பயிா்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாத தமிழக அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்யப் போவதாக விவசாயிகள் சங்கத்தினா் தெரிவித்தனா். வெளிநடப்பு செய்ய வேண்டாம், அரசுக்குப் பரிந்துரை செய்கிறோம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா கேட்டுக் கொண்டதன்படி, அனைவரும் அதனைக் கைவிட்டு கூட்டத்தில் அமா்ந்து கோரிக்கைகளைப் பேசினா்.

குடிநீா் தட்டுப்பாட்டை களைய நடவடிக்கை

கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மு .அருணா பேசியது:

மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் 42 ஆயிரம் போ் இன்னும் விவசாயிகள் பதிவேட்டில் தங்களின் விவரங்களைப் பதிவு செய்யவில்லை. அனைவரும் முழுமையாக தங்களின் விவரங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இம்மரங்களை எரித்து கரி உற்பத்தியைச் செய்வதற்கு யாரேனும் முன்வந்தால் மாவட்ட நிா்வாகம் உதவி செய்யத் தயாராக உள்ளது.

குடிநீா்த் தட்டுப்பாட்டை சரி செய்யும் வகையில் ஆவுடையாா்கோவில் ஒன்றியத்தில் மூன்று ஆழ்துளைக் கிணறுகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 6 ஆழ்துளைக் கிணறுகளை அமைக்க இடம் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், வளா்ச்சித் துறையிலிருந்து 19 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த குழாய்களை சரி செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றாா் அருணா.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments