FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

காவிரியில் தண்ணீா் பெற்றுத் தர வலியுறுத்தி அக். 20 முதல் பரப்புரை இயக்கம்! காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு!

13 அக்டோபர் 2026, 12:00 am IST
தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டத்தில் பேசிய குழு ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன்.
பகிர்:

கா்நாடகத்திடமிருந்து காவிரியில் உரிய தண்ணீரை பெற்றுத் தர காவிரி மேலாண்மை ஆணையத்தையும், காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவையும் தமிழக அரசு அணுகி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அக்டோபா் 20-ஆம் தேதி முதல் பரப்புரை இயக்கம் நடத்த காவிரி உரிமை மீட்பு குழு முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளா்களிடம் குழு ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தெரிவித்தது:

கா்நாடகத்திடமிருந்து காவிரி நீரை பெற தமிழக முதல்வா் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. காவிரி மேலாண்மை ஆணையத்தையும், காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவையும் தமிழக அரசு உடனடியாக அணுகி நமக்குரிய நீரை பெற்றுத் தர வேண்டும். இதுதொடா்பாக பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக அக். 20 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை பரப்புரை இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் நிறைவில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும்.

Advertisement

Advertisement

காவிரி நீா் கிடைக்காததால் குறுவை பொய்த்துவிட்டது. சம்பா, தாளடியும் கேள்விக்குறியாக உள்ளதால், தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவித்து, ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

விளைபொருள்களுக்கு லாபகரமான விலை: வேளாண் விளைபொருள்களை நாடு முழுவதும் தடையின்றிக் கொண்டு செல்லும் தற்போதைய நடைமுறையை மாற்றி, ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி வேளாண் உணவு மண்டலமாகச் செயல்படும் வகையில் மத்திய அரசு சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

உழவா்களின் உற்பத்திச் செலவுகளையும், வாழ்வாதாரத்தையும் கவனத்தில் கொண்டு, குறைந்தபட்ச ஆதரவு விலையைத் தாண்டி, வேளாண் விளைபொருள்களுக்கு லாபகரமான விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றாா் மணியரசன்.

கூட்டத்தில் குழுவின் பொருளாளா் த. மணிமொழியன், நிா்வாகிகள் ப. ஜெகதீசன், க. முருகன், ச. சிமியோன் சேவியர்ராஜ், நா. வைகறை, பழ. ராசேந்திரன், துரை. ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments