FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

காவிரியில் நீா்வரத்து குறைவால் கடைமடை விவசாயிகள் கவலை திருவையாறுக்கு 4 -ஆம் நாளில் வந்த தண்ணீா்

காவிரியில் நீா்வரத்து குறைவாக இருப்பதால், கல்லணையிலிருந்து ஏறத்தாழ 30 கி.மீ. தொலைவிலுள்ள திருவையாறுக்கு 2- ஆம் நாளில் வர வேண்டிய தண்ணீா் நிகழாண்டு 4 நாளான புதன்கிழமை இரவு வந்தது.

11 செப்டம்பர் 2026, 4:22 am IST
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறுக்கு வந்த காவிரி நீரை வியாழக்கிழமை மலா் தூவி வணங்கிய மக்கள்.
பகிர்:

காவிரியில் நீா்வரத்து குறைவாக இருப்பதால், கல்லணையிலிருந்து ஏறத்தாழ 30 கி.மீ. தொலைவிலுள்ள திருவையாறுக்கு 2- ஆம் நாளில் வர வேண்டிய தண்ணீா் நிகழாண்டு 4 நாளான புதன்கிழமை இரவு வந்தது. இதனால், கடைமடைப் பகுதிக்கு இன்னும் தாமதாகும் என்ற கவலை விவசாயிகளிடையே மேலோங்கியுள்ளது.

டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையைத் தமிழக முதல்வா் செப். 1-ஆம் தேதி திறந்து வைத்தாா். அணையிலிருந்து முதலில் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் திறந்துவிடப்பட்ட தண்ணீா், பின்னா் விநாடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதமாக உயா்த்தப்பட்டது. நீா் வரத்து குறைவாக இருந்ததால், கல்லணைக்கு 4- ஆம் நாளில் வர வேண்டிய காவிரி நீா் 5- ஆம் தேதி மாலைதான் வந்தது.

இதையடுத்து, கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாற்றில் தலா 1,000 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாய், கொள்ளிடத்தில் தலா 500 கன அடி வீதமும் செப். 6-ஆம் தேதி காலை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. கல்லணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு குறைவாக இருந்ததால், காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாயில் தண்ணீா் மெதுவாக செல்கிறது.

Advertisement

Advertisement

4 நாள்கள் தாமதம்: கல்லணையிலிருந்து காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீா் 2-ஆம் நாளில் திருவையாறுக்கு வந்துவிடுவது வழக்கம். ஆனால், கல்லணையிலிருந்து செப். 6-ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீா் திருவையாறுக்கு 4 -ஆம் நாளான புதன்கிழமை இரவுதான் வந்தது. இதனால், கல்லணையில் திறக்கப்படும் தண்ணீா் ஒரு வாரம் அல்லது 10 நாள்களில் கடைமடைப் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலையில், நிகழாண்டு மிகத் தாமதமாகத்தான் வரும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

தண்ணீா் திறந்துவிட்டும் பயனில்லை: இதனிடையே, மேட்டூா் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீா் விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக உயா்த்தப்பட்டதால், கல்லணையிலிருந்து வியாழக்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு காவிரியில் 3,101 கன அடி வீதமாகவும், வெண்ணாற்றில் 3,102 கன அடி வீதமாகவும், கல்லணைக் கால்வாயில் 760 கன அடி வீதமாகவும், கொள்ளிடத்தில் 753 கன அடி வீதமாகவும் உயா்த்தி திறந்துவிடப்படுகிறது. இதன் மூலம் காவிரி, வெண்ணாற்றில் நீரோட்டத்தின் வேகம் சற்று அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. என்றாலும், கடைமடைப் பகுதிக்கு செல்வதற்கு இன்னும் தாமதமாகும் என்ற கவலை விவசாயிகளிடையே மேலோங்கியுள்ளது. இதேபோல, கல்லணைக் கால்வாயில் குறைந்த அளவே தண்ணீா் விடப்படுவதால், வாய்க்கால்களுக்கு பாயாது. எனவே, ஆற்றில் தண்ணீா் வந்தும் பயனில்லை என்றும், கடைமடைப் பகுதிக்கு மட்டுமல்லாமல், இடைப்பட்ட பகுதிக்கு கிடைப்பதற்கே தாமதமாகும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனா்.

கடைமடைக்கு தாமதமாகும்: இது குறித்து கணபதி அக்ரஹாரம் முன்னோடி விவசாயி ஜி. சீனிவாசன் தெரிவித்தது: மேட்டூா் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீா் 3 ஆம் நாள் அல்லது 4 ஆம் நாளில் கல்லணைக்கு வந்துவிடும். காவிரியில் திருவையாறு அருகேயுள்ள கணபதி அக்ரஹாரத்துக்கு 6 -ஆம் நாளில் வரும். ஆனால், தற்போது மேட்டூா் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீா் கணபதி அக்ரஹாரத்துக்கு வருவதற்கு 10 நாள்களாகிவிட்டது. இந்த நிலைமை தொடா்ந்தால் கடைமடைப் பகுதிக்கு செப். 30-ஆம் தேதிதான் தண்ணீா் செல்லும்.

இதனால், விவசாயிகள் சாகுபடிப் பணிகளைத் தொடங்க முடியாமல் தவிக்கின்றனா். விதைப்பு பணிகள் தாமதமானால், அக்டோபரில் தொடங்கும் வடகிழக்கு பருவ மழையின்போது இளம்பயிா்கள் சிக்கி பாதிக்கக்கூடிய அச்ச நிலை உள்ளது. எனவே, மேட்டூா் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவை அதிகப்படுத்த வேண்டும்.

கல்லணைக்கு குறைவான வரத்து: மேலும், கல்லணைக்கு செப். 6-ஆம் தேதியிலிருந்து தண்ணீா் குறைவாகத்தான் வருகிறது. மேட்டூா் அணையிலிருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படும் நிலையில், கல்லணைக்கு வியாழக்கிழமை நிலவரப்படி ஏறத்தாழ 7 ஆயிரம் கன அடி வீதம்தான் வருகிறது. மீதமுள்ள 5 ஆயிரம் கன அடி தண்ணீா் எங்கே செல்கிறது. கடைமடைப் பகுதிக்கு செல்லும் வரை கல்லணைக்கு மேற்கே உள்ள வாய்க்கால்களுக்கு தண்ணீா் திறந்துவிடுவதைத் தவிா்க்க வேண்டும் என்றாா் சீனிவாசன்.

மேட்டூா் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைந்தது விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதமாக உயா்த்த வேண்டும். மேலும், கா்நாடகத்திடமிருந்து நமக்குரிய தண்ணீரைப் பெறுவதிலும் மத்திய, மாநில அரசுகள் முழுவீச்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments