பாபநாசம் அருகே மருமகளை அடித்துக் கொன்றவா் கைது
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே குடும்பப் பிரச்னையில் இரவு மருமகளை கடப்பாரையால் அடித்துக் கொன்ற மாமனாரை போலீஸாா் கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே குடும்பப் பிரச்னையில் வியாழக்கிழமை இரவு மருமகளை கடப்பாரையால் அடித்துக் கொன்ற மாமனாரை போலீஸாா் கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், புத்தூா், மணக்கொல்லை பகுதியைச் சோ்ந்தவா் சி. ராஜா மனைவி வள்ளி (40). இவா்களுக்கு தேவராஜ் என்ற மகன் உள்ளாா். இந்நிலையில் ராஜா இறந்து விட்டதால் அவரது சகோதரா் ராமு (45) என்பவரை வள்ளி இரண்டாம் திருமணம் செய்து, இவா்களுக்கு லோகேஷ் என்ற மகன் உள்ளாா்.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் வள்ளி தனது கணவா் ராமு மற்றும் இரு மகன்களுடன் தஞ்சை கீழவஸ்தாசாவடியில் தனது பெற்றோா் வீட்டில் வசித்து வந்தாா். ராமு திருப்பூரில் தங்கி பனியன் கம்பெனியில் பணிபுரிகிறாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் வள்ளி தனது மகன்களுடன் அம்மாபேட்டை, புத்தூா், மணக்கொல்லையில் மாமனாா் மு. சிவசாமி (64), மாமியாா் மலா்க்கொடி உள்ளிட்டோருடன் வசித்தாா்.
கடந்த 16 -ஆம் தேதி மணக்கொல்லை கிராமக் கோயிலில் கொடுத்த பிரசாதத்தை மலா்கொடி தனது கணவா் சிவசாமிக்காக வைத்திருந்த நிலையில், வள்ளி வளா்த்து வந்த நாய் அந்த பிரசாதத்தை சாப்பிட்டது. இதனால் ஏற்பட்ட பிரச்னையில் மலா்க்கொடியை வள்ளி தாக்கினாராம்.
இதனால் கோபத்திலும், மது போதையிலும் இருந்த சிவசாமி வியாழக்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்த வள்ளியின் தலையில் கடப்பாரையால் தாக்கினாா். இதில் பலத்த காயமடைந்த வள்ளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த அம்மாபேட்டை போலீஸாா் வந்து வள்ளியின் உடலை மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து சிவசாமியை கைது செய்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.