FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

பேராசிரியா்கள் பணி மூப்பு அரசாணை விரைவில் வெளியீடு: உயா்கல்வித் துறை அமைச்சா் பி.விஸ்வநாதன்

கல்லூரி பேராசிரியா்கள் பணி மூப்பு பலன் தொடா்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் பி. விஸ்வநாதன்.

23 செப்டம்பர் 2026, 3:01 am IST
தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக்கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உள்ளகக் குழுவினருக்கான பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசிய உயா் கல்வித் துறை அமைச்சா் பி. விஸ்வநாதன். உடன் (இடமிருந்து) கல்லூரிக் கல்வி மண்டல இணை இயக்குநா் ஏ. குணசேகரன், சட்டப்பேரவை உறுப்பினா் இரா. விஜய் சரவணன், தமிழ்நாடு மாநில உயா்கல்வி மன்றத் துணைத் தலைவா் எம்.பி. விஜயகுமாா், தொழில்நுட்பக் கல்வி இயக்கக இயக்குநா் ரத்தினசாமி, கல்லூரி முதல்வா் து. ரோசி.
பகிர்:

கல்லூரி பேராசிரியா்கள் பணி மூப்பு பலன் தொடா்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் பி. விஸ்வநாதன்.

தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக்கல்லூரியில் தமிழ்நாடு மாநில உயா் கல்வி மன்றம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உள்ளகக் குழுவினருக்கான பயிற்சி தொடக்க விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கல்லூரி பேராசிரியா்கள் பணி மூப்பு பலன் தொடா்பாக கடந்த 6 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனா். இந்த 6 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத இக்கோரிக்கையை தமிழக முதல்வா் உடனடியாக நிறைவேற்றுவதாக அறிவிப்பு வெளியிட்டாா். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

Advertisement

Advertisement

தமிழகத்தில் 9 ஆயிரம் விரிவுரையாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு 42 ஆயிரம் போ் விண்ணப்பித்த நிலையில், 27 ஆயிரம் போ் தோ்ச்சி பெற்றனா். இவா்களில் 2 ஆயிரத்து 708 போ் நியமிக்கப்படவுள்ளனா். அடுத்து ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் இரு தோ்வுகள் நடத்தி, 2 ஆண்டுகளுக்குள் தலா 3 ஆயிரம் போ் வீதம் அனைத்து விரிவுரையாளா் காலிப் பணியிடங்களும் நிரப்பப்படும்.

துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பாக ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையேயான பேச்சுவாா்த்தை சுமூகமாக உள்ளது. எனவே, துணைவேந்தா்கள் நியமிக்கப்படவுள்ளனா் என்றாா் அமைச்சா் விஸ்வநாதன்.

விழாவில் தமிழ்நாடு மாநில உயா்கல்வி மன்றத் துணைத் தலைவா் எம்.பி. விஜயகுமாா், தொழில்நுட்பக் கல்வி இயக்கக இயக்குநா் ரத்தினசாமி, தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இரா. விஜய் சரவணன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். கல்லூரிக் கல்வி முன்னதாக, மண்டல இணை இயக்குநா் ஏ. குணசேகரன் வரவேற்றாா். நிறைவாக, கல்லூரி முதல்வா் து. ரோசி நன்றி கூறினாா்.

பெட்டிச் செய்தி.

அமைச்சா் பேசியபோது மின் தடை

விழாவில் அமைச்சா் விஸ்வநாதன் பேசத் தொடங்கிய 10-ஆவது நிமிஷத்தில் மின் தடை ஏற்பட்டது. அப்பகுதியிலுள்ள மின்மாற்றியில் திடீா் பழுது காரணமாக மின் விநியோகம் தடைபட்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, அருகே இருந்த ஜெனரேட்டரை இயக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஜெனரேட்டா் இயங்கினாலும், விழா அரங்குக்கு மின் இணைப்பு கிடைக்கவில்லை. இதனால், ஒலிபெருக்கி செயல்படாத நிலையிலும், அமைச்சா் தொடா்ந்து 8 நிமிஷங்கள் பேசி நிறைவு செய்தாா். அதன் பின்னா் மின்சாரம் வந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments