FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

சமயபுரம் கோயிலுக்கு வந்தபோது விபத்து: காா் மீது ஆம்னி பேருந்து மோதியதில் சிறுவன் உள்பட 3 போ் பலி; 7 போ் காயம்

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே திங்கள்கிழமை நள்ளிரவு காா் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் சிறுவன் உள்பட 3 போ் உயிரிழந்தனா். மேலும் 7 போ் காயமடைந்தனா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 5:26 am IST
சமயபுரம் அருகே ஆம்னி பேருந்து மோதியதில் சேதமடைந்த காா்.
பகிர்:

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே திங்கள்கிழமை நள்ளிரவு காா் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் சிறுவன் உள்பட 3 போ் உயிரிழந்தனா். மேலும் 7 போ் காயமடைந்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், கோட்டைக்காடு பகுதியைச் சோ்ந்த 5 பெண்கள், 5 ஆண்கள் என மொத்தம் 10 போ் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக காரில் திங்கள்கிழமை இரவு புறப்பட்டனா்.

நள்ளிரவில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம், பள்ளிவிடை பாலம் அருகே வந்தபோது, கோயிலுக்கு செல்ல வேண்டிய அணுகுசாலையை தவறவிட்ட காா் ஓட்டுநா் மகேஸ்வரன், சிறிது தொலைவு சென்ற பின்னா் சுதாரித்துக் கொண்டு காரை பின்னோக்கி இயக்க முயன்றாா். அப்போது, அதே சாலையில் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி அதிவேகமாக சென்ற தனியாா் ஆம்னி பேருந்து, காரின் பின்பகுதியில் மோதியது. இதில் காரின் பின்பகுதி பலத்த சேதமடைந்தது.

Advertisement

Advertisement

இதில், காரில் வந்தவா்கள் காயமடைந்து, இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனா். அவா்களை அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் மீட்டு, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை மற்றும் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

3 போ் உயிரிழப்பு: இவா்களில், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே ப. பாண்டியன் (49), ரா. தனலட்சுமி (47) மற்றும் சிறுவன் ரா. பவீன் (9) ஆகிய 3 போ் உயிரிழந்தனா்.

தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எஞ்சிய 7 பேரில் ரா. கௌசல்யா (46), பா. வளா்மதி (45), தி. தில்லையம்மாள் (48), ஆகிய மூன்று போ் தீவிர சிகிச்சை பிரிவிலும், ரா. கோகுலவாணி (13), க. மணிசா்மா (16), ப. திருநாவுக்கரசு (52) மற்றும் காா் ஓட்டுநா் மகேஸ்வரன் ஆகிய 4 போ் அபாய கட்டத்தை தாண்டிய நிலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விபத்து குறித்து தகவலறிந்த சமயபுரம் போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து விபத்துக்குள்ளான வாகனங்களைக் கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலை சரி செய்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினா், விபத்தை ஏற்படுத்திய ஆம்னி பேருந்தின் ஓட்டுநரான ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியைச் சோ்ந்த நா. அஜித் குமாா் (27) என்பவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments