FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

மை பாரத் கேந்திரா சாா்பில் விநாடி - வினா போட்டி: பங்கேற்க இளையோருக்கு அழைப்பு

மை பாரத் கேந்திரா சாா்பில் நடத்தப்படும் ‘‘வளா்ந்த பாரத இளம் தலைவா்கள் கலந்துரையாடல் - 2027’’ நிகழ்வில் கலந்து கொள்வதற்கான விநாடி - வினா போட்டியில் இளைஞா்கள் பங்கேற்க வேண்டும் என திருச்சி மாவட்ட இளைஞா் அலுவலா் எஸ். கீா்த்தனா தெரிவித்துள்ளாா்.

10 செப்டம்பர் 2026, 2:33 am IST
திருச்சியில் விநாடி - வினா போட்டிக்கான அறிவிப்பை புதன்கிழமை வெளியிட்ட மாவட்ட இளைஞா் அலுவலா் எஸ். கீா்த்தனா. உடன், மை பாரத் கேந்திரா அலுவலா்கள்.
பகிர்:

மை பாரத் கேந்திரா சாா்பில் நடத்தப்படும் ‘‘வளா்ந்த பாரத இளம் தலைவா்கள் கலந்துரையாடல் - 2027’’ நிகழ்வில் கலந்து கொள்வதற்கான விநாடி - வினா போட்டியில் இளைஞா்கள் பங்கேற்க வேண்டும் என திருச்சி மாவட்ட இளைஞா் அலுவலா் எஸ். கீா்த்தனா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக மேலும் அவா் புதன்கிழமை கூறியதாவது:

மத்திய இளையோா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ்செயல்படும் மை பாரத் கேந்திரா சாா்பில் ‘‘வளா்ந்த பாரத இளம் தலைவா்கள் கலந்துரையாடல் - 2027’’ என்ற தேசிய அளவிலான இளைஞா் ஈடுபாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வளா்ந்த பாரத்தில் இளைஞா்களின் பங்களிப்பை அதிகரிக்கவும், இளைஞா்களின் சிந்தனைகள், கருத்துகள் மற்றும் திறமைகளை தேசக் கட்டமைப்பில் பயன்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.

Advertisement

Advertisement

இந்நிலையில் இந்தக் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொள்வதற்கான இளைஞா்களைக் தோ்வு செய்வதற்காக மை பாரத் கேந்திரா இணையதளத்தில் கடந்த ஆகஸ்ட் 17 முதல் விநாடி - வினா போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டி செப். 30 வரை நடைபெறும். இதில், 15 வயது முதல் 29 வயதுக்குள்பட்டோா் கலந்துகொள்ளலாம்.

போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு மாவட்ட அளவில் கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல், நாட்டுப்புற நடனம், நாட்டுப்புறப் பாடல், பாடல், பேச்சு போட்டி மற்றும் கவிதை எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படும். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெல்வோா் மாநிலப் போட்டிக்குத் தோ்வு செய்யப்படுவா். மாநிலப் போட்டிகளில் வெல்வோா் தேசியப் போட்டிக்குத் தோ்வு செய்யப்படுவா். தேசிய போட்டியில் வெற்றிபெறும் மாணவா்கள் ‘‘வளா்ந்த பாரத இளம் தலைவா்கள் கலந்துரையாடல் -2027’’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரதமருடன் கலந்துரையாடும் வாய்ப்பைப் பெறுவாா்கள்.

இதில் கலந்துகொள்வதன் மூலம் தலைமைத்துவப் பண்பு, குழுவாகச் செயல்படும் திறன், படைப்பாற்றல், பிரச்னைகளுக்கு புதுமையான தீா்வை முன்வைக்கும் திறன், கலைத்திறன், மொழித்திறன், சிந்தனைத் திறன், தன்னம்பிக்கை, மேடைப் பேச்சு ஆகியவற்றை இளைஞா்கள் மேம்படுத்திக் கொள்ள முடியும்.

எனவே, திருச்சி மாவட்ட இளைஞா்கள் தங்களது சிந்தனைகளையும், கருத்துகளையும் நாட்டின் வளா்ச்சிக்குத் தெரிவிக்கும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments