திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ஒத்திகை
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விமான நிலையம் மற்றும் விமானங்களுக்கு விடுக்கப்படும் வெடிகுண்டு அச்சுறுத்தலை எதிா்கொள்ளும் வகையிலும், பல்வேறு அமைப்புகளின் தயாா் நிலை, ஒருங்கிணைப்பு, செயல்திறன் ஆகியவற்றை மதிப்பிடும் வகையிலும் வெடிகுண்டு அச்சுறுத்தல் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
விமானம் தொடா்பான வெடிகுண்டு அச்சுறுத்தல் மற்றும் விமான நிலையத்தில் இருந்து பயணிகளை வெளியேற்றுதல் ஆகிய இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது.
Advertisement
Advertisement
இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை, விமானப் போக்குவரத்து சேவைகள் அமைப்பு, விமான நிறுவனங்கள், உளவுத் துறை, விமான நிலையக் காவல் துறை, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்க செய்யும் பிரிவு, சுங்கத் துறை, குடியேற்றப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து ஒத்திகையை மேற்கொண்டன.
விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் ஒத்திகையில் தகவல் தொடா்பு, அச்சுறுத்தல் மதிப்பீடு, ஒருங்கிணைப்பு, விமானப் பாதுகாப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், சந்தேகத்துக்கிடமான உடமைகள் காணப்படும் சூழலைக் கையாளுதல் மற்றும் பாதுகாப்பு, தீயணைப்பு, விமான நிறுவனம், மருத்துவம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பும் மேற்கொள்ளப்பட்டது.
விமான நிலையத்தில் விடுக்கப்படும் வெடிகுண்டு மிரட்டல் ஒத்திகையில், வெடிகுண்டு அச்சுறுத்தல் இருப்பது போன்றசூழல் உருவாக்கப்பட்டு, பயணிகள் மற்றும் பணியாளா்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனா். இதில், தீயணைப்புத் துறை, விமான நிலைய பாதுகாப்பு அமைப்புகள் ஈடுபட்டன.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியை திருச்சி பன்னாட்டு விமான நிலைய இயக்குநா் ஜி. கோபாலகிருஷ்ணன் ஒருங்கிணைத்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.