FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

ஒடுகத்தூரில் வினோத வழிபாடு: மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம்!

மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்து வினோத வழிபாடு குறித்து...

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 7:16 am IST
ஒடுகத்தூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்.
பகிர்:

ஒடுகத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் தண்ணீா் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்து வினோத வழிபாட்டில் ஈடுபட்டனா்.

அணைக்கட்டு வட்டம் ஒடுகத்தூா், மேலரசம்பட்டு, கொட்டாவூா், வேப்பங்குப்பம், கெங்கசானிகுப்பம், வண்ணாந்தாங்கல், அம்மனூா் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனா். ஆனால், சமீபகாலமாக இப்பகுதிகளில் போதிய மழையின்மை காரணமாக வறட்சி நிலவி வருகிறது.

இப்பகுதியில் உள்ள கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளில் நீா்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதுடன், பாசனத்துக்குப் போதிய தண்ணீரின்றி வயல்கள் காய்ந்து, நிலத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. பச்சைப் பசேலென காட்சியளிக்க வேண்டிய நெற்பயிா்கள் நீரின்றி கருகி மஞ்சள் நிறமாக மாறியுள்ளன.

Advertisement

Advertisement

இதையடுத்து, வருண பகவானைக் குளிா்வித்து மழை பெய்ய வேண்டியும், விவசாயிகளின் நலனுக்காகவும் அப்பகுதி மக்கள் பாரம்பரிய நம்பிக்கையின்படி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனா். இதற்காக ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் கழுதைக்கு, மணமகன், மணமகள் போல ஆடை உடுத்தி, மாலை அணிவித்து சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. பின்னா் மேளதாளங்கள் முழங்க, ஊா்வலமாக இரண்டு கழுதைகளும் அழைத்து வரப்பட்டன.

தொடா்ந்து, ஒடுகத்தூா் பேரூராட்சி அலுவலகம் அருகிலுள்ள ஸ்ரீஎல்லையம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. யாகம் வளா்க்கப்பட்டு, புரோகிதா் வேத மந்திரங்கள் முழங்க, ஏராளமான பொதுமக்கள் முன்னிலையில் கழுதைகளுக்கு தாலி கட்டி கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது. இந்த வினோத திருமணத்தில் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

வழக்கமான திருமண விழாவைப் போலவே, கல்யாணமான கழுதைகளுக்குப் பொதுமக்கள் மொய் எழுதி ஆசீா்வாதம் பெற்றனா். மேலும், இந்தக் கழுதைகள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றால் திருமணம் ஆகாதவா்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்ற நம்பிக்கை அப்பகுதி மக்களிடையே பாரம்பரியமாக நிலவுகிறது. இதனால் ஏராளமான திருமணமாகாத பெண்களும் இதில் ஆா்வமுடன் கலந்து கொண்டு வழிபட்டனா். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments