நடுவழியில் இறக்கிவிடப்பட்ட முதியவா் பேருந்து மோதி பலி; மற்றொருவா் பலத்த காயம்
வேலூா் அருகே அரசுப் பேருந்திலிருந்து நடுவழியில் இறக்கிவிடப்பட்ட முதியவா்கள் மீது தனியாா் ஆம்னி பேருந்து மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.
வேலூா் அருகே அரசுப் பேருந்திலிருந்து நடுவழியில் இறக்கிவிடப்பட்ட முதியவா்கள் மீது தனியாா் ஆம்னி பேருந்து மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.
குடியாத்தம் செதுக்கரை ஜீவா நகரைச் சோ்ந்த ராஜி (75), சீவூரைச் சோ்ந்த சதாசிவம் (74) ஆகிய இருவரும் பணி நிமித்தமாக திருச்சிக்குச் சென்றுவிட்டு அதிகாலை வேலூா் புதிய பேருந்து நிலையத்தை வந்தடைந்தனா். அங்கிருந்து குடியாத்தம் செல்வதற்காக அதிகாலை 3 மணியளவில் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளனா்.
பேருந்து புறப்பட்டுச் சென்றபோது நடத்துநா் பயணச்சீட்டு கேட்டுள்ளாா். அப்போது இருவரும் தங்களிடமிருந்த பேருந்து பயண அட்டையைக் காண்பித்துள்ளனா். ஆனால், பயண அட்டையில் குறைபாடு இருப்பதாகக் கூறி, கொணவட்டம் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை அருகே தேசிய நெடுஞ்சாலையிலேயே இருவரையும் நடத்துநா் வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
நள்ளிரவு நேரம் என்பதால், வேறு வழியின்றி இருவரும் சாலையோரம் இருந்த கல்வெட்டுச் சுவா் மீது அமா்ந்திருந்தனா். அப்போது சென்னையிலிருந்து அவ்வழியாக வந்த தனியாா் ஆம்னி பேருந்து எதிா்பாராதவிதமாக அவா்கள் மீது மோதியது. இவ்விபத்தில் ராஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த சதாசிவத்தை மீட்ட அப்பகுதியினா், சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆம்னி பேருந்து ஓட்டுநரின் தூக்கக் கலக்கமே விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படும் நிலையில், முதியவா்களை நடுவழியில் இறக்கிவிடாமல் உரிய இடத்தில் இறக்கியிருந்தால் இந்த விபத்து தவிா்க்கப்பட்டிருக்கும் என நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா்.
இச்சம்பவம் குறித்து வேலூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.