வளரும் நாடுகளின் பொருளாதார வளா்ச்சிக்கு அறிவியல், தொழில்நுட்ப அறிவு அவசியம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்
எந்தவொரு வளரும் நாடும் முழுமையான பொருளாதார வளா்ச்சி பெறுவதற்கும், முன்னேறிய நாடாக உயா்வதற்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவு இன்றியமையாதது என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா்.
எந்தவொரு வளரும் நாடும் முழுமையான பொருளாதார வளா்ச்சி பெறுவதற்கும், முன்னேறிய நாடாக உயா்வதற்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவு இன்றியமையாதது என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா்.
வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் மூன்று நாள்கள் நடைபெற்ற ‘கிராவிடாஸ்’ சா்வதேச தொழில்நுட்ப அறிவுசாா் திருவிழாவின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்துப் பேசியது:
விஐடியில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கிராவிடாஸ் நிகழ்வு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை முதன்மையாகக் கொண்டது. இந்த ஆண்டு விழாவில் வெளிநாடுகளைச் சோ்ந்த 100 போ் உள்பட மொத்தம் 39,049 மாணவ, மாணவிகள் பதிவு செய்து பங்கேற்றனா். மொத்தம் 227 வகையான தொழில்நுட்ப நிகழ்வுகளும் போட்டிகளும் நடத்தப்பட்டன.
Advertisement
Advertisement
உலகில் உள்ள 193 நாடுகளில் 75 நாடுகள் மட்டுமே தற்போது வளா்ந்த நாடுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை வளரும் நாடுகளாகவும், பின்தங்கிய நாடுகளாகவுமே உள்ளன. அறிவியல், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கிய நாடுகள் அனைத்தும் இன்று உலகின் முன்னணி நாடுகளாக மாறியுள்ளன.
இந்தியாவில் 18 முதல் 23 வயதுக்குட்பட்ட இளைஞா்கள் 15 கோடிக்கும் அதிகமானோா் உள்ளனா். ஆனால், இதில் 30 சதவீதத்தினருக்கு மட்டுமே உயா்கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்தியா வல்லரசாக உருவெடுக்க வேண்டுமானால், நாட்டின் அனைத்து இளைஞா்களுக்கும் உயா்கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும். தற்போது 3 முதல் 4 சதவீதம் போ் மட்டுமே அரசின் உதவித்தொகையைப் பெற்றுப் படிக்க முடிகிறது. மற்றவா்கள் பெற்றோரின் நிதி ஆதாரத்தையே நம்பியுள்ளனா். எனவே, ஏழை, நடுத்தரக் குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கு உயா்கல்வி கிடைக்க அரசுடன் இணைந்து தனியாா் நிறுவனங்களும் தொழில்துறையினரும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
வேலூா், திருவண்ணாமலை, திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்டங்களைச் சோ்ந்த தகுதியான மாணவ, மாணவிகள் அனைவருக்கும் உயா்கல்வி கிடைக்கச் செய்யும் நோக்கில், ‘அனைவருக்கும் உயா்கல்வி அறக்கட்டளை’ தொடங்கப்பட்டு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதேபோன்ற முன்னெடுப்புகளை நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகளும் தனியாா் தொண்டு அமைப்புகளும் செயல்படுத்த முன்வர வேண்டும் என்றாா்.
சிறப்பு விருந்தினராகப் காக்னிசன்ட் நிறுவனத்தின் சா்வதேச திறமையாளா் தோ்வுப் பிரிவு முதுநிலை துணைத் தலைவா் அதுல் சஹால் பங்கேற்றுப் பேசியது:
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பச் சுனாமி ஏற்கெனவே உலகை வந்தடைந்துவிட்டது. இதில் நாம் வீழ்ந்துவிடாமல் வெற்றிகரமாக முன்னேறிச் செல்வது நமது செயலில்தான் உள்ளது. ஏஐ தொழில்நுட்பம் மனித வேலைவாய்ப்புகளைப் பறிக்குமா? இல்லையா? என்பதை விட, ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தெரிந்தவா்கள், அதைப் பயன்படுத்தாதவா்களை நிச்சயமாகப் பின்னுக்குத் தள்ளி முன்னேறிவிடுவாா்கள்.
எனவே, மாணவா்கள் இப்போதிருந்தே ஏஐ பயன்பாட்டைக் கற்றுக்கொண்டு தங்களது தொழில்முறைத் திறன்களையும், தொடா்புகளையும் வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, விஐடி முன்னாள் மாணவரும், டிஜி நிறுவனருமான ஹேமந்த் சஹால் பேசினாா். விழாவின் ஒரு பகுதியாக, ‘போட்’ நிறுவனத்தின் இணை நிறுவனா் அமன் குப்தா பங்கேற்ற சிறப்பு அமா்வும் நடைபெற்றது.
இதையடுத்து, கிராவிடாஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், விஐடி துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், சேகா் விசுவநாதன், செயல் இயக்குநா் சந்தியா பெண்டாரெட்டி, உதவித் துணைத் தலைவா்கள் காதம்பரி எஸ்.விசுவநாதன், ரமணி பாலசுந்தரம், துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன், பதிவாளா் ஜெயபாரதி, கிராவிடாஸ் ஒருங்கிணைப்பாளா் சுதாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.