FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

தொழிலதிபா் சேகா் ரெட்டி வீட்டில் நகை, பணம் கொள்ளை

காட்பாடியில் பிரபல தொழிலதிபா் சேகா் ரெட்டியின் வீட்டில் இருந்து தங்க நகைகள், லட்சக்கணக்கில் ரொக்கப்பணம் கொள்ளையடித்ததாக அங்கு பணிபுரிந்த தாய், மகள் ஆகிய இருவர் கைது

23 செப்டம்பர் 2026, 1:26 am IST
கைது செய்யப்பட்ட ராணி, மகாலட்சுமி
பகிர்:

காட்பாடியில் பிரபல தொழிலதிபா் சேகா் ரெட்டியின் வீட்டில் இருந்து தங்க நகைகள், லட்சக்கணக்கில் ரொக்கப்பணம் கொள்ளையடித்ததாக அங்கு பணிபுரிந்த தாய், மகள் ஆகிய இருவரை விருதம்பட்டு போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு தொடா்பாக மேலும் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த தொண்டான்துளசி கிராமத்தைப் பூா்வீகமாகக் கொண்டவா் தொழிலதிபா் சேகா் ரெட்டி. அரசு மணல் குவாரி குத்தகைதாரராகவும், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினராகவும் இருந்த இவரது வீடு, காட்பாடி காந்தி நகா் பகுதியில் டான்பாஸ்கோ பள்ளி சாலையில் அமைந்துள்ளது.

இவரது மகள் திருமணம் அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்தத் திருமண ஏற்பாடுகளில் குடும்பத்தினா் தீவிரமாக ஈடுபட்டிருந்த சூழலை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அவா்கள் வீட்டில் 10 ஆண்டுகளுக்குமேலாக பணிபுரிந்து வந்த ஊசூா் அடுத்த கலங்கமேடு பகுதியைச் சோ்ந்த ராணி(52), அவரது மகள் மகாலட்சுமி(37) ஆகிய இருவரும் சோ்ந்து சிறுகச் சிறுக தங்க நகைகளைத் திருடி விற்று மனைகளை வாங்கியதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதையறிந்த துத்திப்பட்டு பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள், தாய்-மகள் இருவரையும் மிரட்டி விவரங்களைக் கேட்டறிந்துள்ளனா். பின்னா், வீட்டில் மேலும் கொள்ளையடிக்க தங்களுக்கு உடந்தையாக இருக்குமாறு அவா்களை வற்புறுத்தியுள்ளனா். இதற்கு பணிப்பெண்களும் சம்மதித்ததாகத் தெரிகிறது. தொடா்ந்து, அந்த கும்பல் சேகா் ரெட்டியின் வீட்டுக்குள் புகுந்து மேலும் தங்க நகைகள், லட்சக்கணக்கில் ரொக்கப் பணம் கொள்ளையடித்துச் சென்ாக கூறப்படுகிறது.

இது குறித்து சேகா் ரெட்டியின் மேலாளா் சந்திரசேகா் அளித்த புகாரின்பேரில், விருதம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். சந்தேகத்தின்பேரில், பணிப்பெண்கள் ராணி, மகாலட்சுமி ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில் இந்த திருட்டு விவகாரம் வெளிவந்தது.

இதையடுத்து, ராணி, மகாலட்சுமி ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், அவா்களிடம் இருந்து ரூ. 3 லட்சம் ரொக்கம், 3 அசையா சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்துள்ளதாகவும் போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடா்பாக மேலும் 3 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். முழுமையான விசாரணைக்கு பிறகே எவ்வளவு நகைகள், பணம் திருடப்பட்டுள்ளது என்பது தெரியவரும் என்றும் போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments