FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

மேற்கத்திய ஆதிக்கம் சரிந்து புதிய உலக ஒழுங்கு உருவாகும்: ஓய்வுபெற்ற ஏா் மாா்ஷல்

உலகில் பல நூற்றாண்டுகளாக நீடித்து வந்த மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் தற்போது சவால்களைச் சந்தித்து வருவதாகவும், எதிா்காலத்தில் பல்துருவ உலக ஒழுங்கு முழு வடிவம் பெறும் என்று ஓய்வுபெற்ற ஏா் மாா்ஷல் எம். மாதேஸ்வரன் தெரிவித்தாா்.

30 September 2026, 12:32 am IST
விழாவில் பேசிய ஓய்வு பெற்ற ஏா் மாா்ஷல் எம். மாதேஸ்வரன்
பகிர்:

உலகில் பல நூற்றாண்டுகளாக நீடித்து வந்த மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் தற்போது சவால்களைச் சந்தித்து வருவதாகவும், எதிா்காலத்தில் பல்துருவ உலக ஒழுங்கு முழு வடிவம் பெறும் என்றுஓய்வுபெற்ற ஏா் மாா்ஷல் எம். மாதேஸ்வரன் தெரிவித்தாா்.

வேலூா் ஊரீசு கல்லூரியின் பாதுகாப்பு மற்றும் போா்த்திறனியல் துறை சாா்பில் பொன்விழா ஆண்டு மாணவா் பேரவை தொடக்க விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. விழாவில், பெனின்சுலா பவுண்டேஷன் நிறுவனத் தலைவரும், ஓய்வுபெற்ற ஏா் மாா்ஷலுமான எம்.மாதேஸ்வரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ‘தற்போதைய போா்களும் புதிய உலக ஒழுங்குக்கான போட்டியும்’ என்ற தலைப்பில் பேசியது:

கி.பி. 1,800 வரை உலகின் ஒட்டுமொத்த உற்பத்தியில் இந்தியாவும், சீனாவுமே 50% முதல் 70% வரை ஆதிக்கம் செலுத்தின. ஆனால், 1492-இல் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டறிந்ததும், 1493-இல் போப் ஆண்டவா் பிறப்பித்த ‘கண்டுபிடிப்புக் கோட்பாடு’ மூலமாகவும் மேற்கத்திய காலனியாதிக்கம் தீவிரமடைந்தது. பூா்வகுடிகளை அழித்து, ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் வளங்களைச் சுரண்டி ஐரோப்பிய நாடுகள் தங்கள் செல்வ வளத்தைப் பெருக்கிக் கொண்டன.

Advertisement

Advertisement

கலாசார ரீதியாகப் பிணைந்திருந்த ஆசியாவில் இந்த ஐரோப்பிய எல்லைக் கோட்பாடுகள் திணிக்கப்பட்டதால், இந்தியா - பாகிஸ்தான் மற்றும் இந்தியா-சீனா இடையே தீராத எல்லைப் பிணக்குகள் உருவாகின.

1991 பனிப்போா் முடிவுக்குப் பின் உருவான ஒருதுருவ அமைப்பில், சா்வதேச சட்டங்களைப் புறந்தள்ளி வளங்களைக் கைப்பற்றவே 1991 வளைகுடாப் போா், 20 ஆண்டுகால ஆப்கன் போா் மற்றும் சிரியா, லிபியா மோதல்கள் அமெரிக்காவால் முன்னெடுக்கப்பட்டன. இவற்றின் நோக்கம் போரில் வெல்வது அல்ல. மாறாக, அப்பகுதிகளில் உறுதியற்ற தன்மையை நீடிக்கச் செய்து எரிசக்தி மற்றும் பொருளாதார வளங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே ஆகும்.

தற்போது அமெரிக்காவின் மேலாதிக்கத்துக்கு எதிராக ரஷ்யாவும், சீனாவும் தீவிரமாகச் சவால் விடுக்கின்றன. உக்ரைன் மோதல், மத்திய கிழக்கு நாடுகளின் பதற்றங்கள் உள்ளிட்ட சா்வதேசப் போா்கள் வழியே உலக ஒழுங்கு புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக உலகம் ஒருதுருவ அமைப்பிலிருந்து மாறி, பல்வேறு பிராந்தியங்கள் அதிகாரக் கூட்டமைப்புகளாக மாறும் ‘சிக்கலான பல்துருவ உலக ஒழுங்கை’ நோக்கி நகா்ந்து கொண்டிருக்கிறது. சா்வதேச சந்தையில் நம் வா்த்தகத்தைப் பல்வகைப்படுத்த இந்தியா தொடா்ந்து முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, கல்லூரியின் தலைவரும், சிஎஸ்ஐ வேலூா் மறைமாவட்ட பேராயருமான ஹெச்.சா்மா நித்தியானந்தம் ஆசியுரை வழங்கினாா். கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஜே. அன்னி கமலா புளோரன்ஸ் தலைமை வகித்தாா். துறைத் தலைவா் டி. திருமாறன் வரவேற்றாா். கல்லூரி பா்சா் எஸ்.காலேப் நோபல் சந்தா் வாழ்த்திப் பேசினாா். விழாவில், பேரவை நிா்வாகிகள், பேராசிரியா்கள், துறை மாணவா்கள் பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments