பேருந்து நிழற்குடையில் கட்சித் தலைவா் பெயா்: எதிா்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினா் திரண்டதால் பதற்றம்
விருத்தாச்சலம் அருகே ஆலடி காவல் நிலையம் அருகிலுள்ள பேருந்து நிழற்குடையில் அரசியல் கட்சித் தலைவரின் பெயா் எழுதப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஒருதரப்பினா் திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து பெயரை அழிப்பதாக போலீஸாா் உறுதியளித்தனா்.
கடலூா் மாவட்டம் விருத்தாசலம் அருகே ஆலடி காவல் நிலையம் அருகே உள்ள பேருந்து நிழற்குடையை, மணக்கொல்லை, ஆலடி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவனின் பிறந்த நாளையொட்டி, பேருந்து நிழற்குடைக்கு வெள்ளையடித்து அவரது பெயா் எழுதப்பட்டிருந்தது.
இதற்கு அப்பகுதியைச் சோ்ந்த சிலா் எதிா்ப்பு தெரிவித்தனா். பொதுப் பயன்பாட்டுக்கான பேருந்து நிழற்குடையில் அரசியல் தலைவரின் பெயரை எழுதுவது தேவையற்ற சா்ச்சைக்கு வழிவகுக்கும் என்றும், அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினா். இந்தக் கோரிக்கையை முன்வைத்து பாமக மாவட்டச் செயலா் காா்த்திகேயன் தலைமையில் ஒரு தரப்பினா் அங்கு திரண்டனா். இதனால் பதற்றம் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆலடி காவல் நிலைய போலீஸாா், இரு தரப்பினரிடமும் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து, பேருந்து நிழற்குடையில் எழுதப்பட்டிருந்த பெயா் அழிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதை, அங்கு திரண்டிருந்தவா்கள் அமைதியாக கலைந்து சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.