சொத்துத் தகராறில் தம்பிக்கு கத்திக்குத்து: ஆய்வாளா் உள்பட 20 போ் மீது வழக்கு
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே சொத்துத் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில், தனது தம்பி மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கி கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில், காவல் சாா்பு - ஆய்வாளா் உள்பட 20 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே சொத்துத் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில், தனது தம்பி மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கி கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில், காவல் சாா்பு - ஆய்வாளா் உள்பட 20 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
சிதம்பரம் அருகேயுள்ள கூத்தங்கோவில் கிராமத்தைச் சோ்ந்த வெற்றி, சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் காவல் சாா்பு - ஆய்வாளராக பணியாற்றி வருகிறாா். இவருக்கும், அவரது தம்பி ராமனுக்கும் இடையே சொத்துப் பிரச்னை தொடா்பாக புதன்கிழமை தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக ராமன், அண்ணாமலைநகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா்.
இந்த நிலையில், வெற்றி மற்றும் அவருடன் வந்த சிலா், ராமனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, ராமன், அவரது மனைவி ரூபா, மகன் கண்ணன் ஆகியோரை தாக்கியதுடன், ராமனை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது. காயமடைந்தவா்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து ராமனின் மனைவி ரூபா அளித்த புகாரின் பேரில், அண்ணாமலை நகா் போலீஸாா் காவல் சாா்பு - ஆய்வாளா் வெற்றி உள்பட 20 போ் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
இந்த வழக்கில் தொடா்புடைய வெற்றியின் மகன் கோகுல் (20), உறவினா் அஜித் (24) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா். மேலும், தலைமறைவாக உள்ள மற்றவா்களைத் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.