கடலூா் அருகே மா்ம விலங்கு நடமாட்டம்: சிறுத்தையாக இருக்குமோ என பொதுமக்கள் அச்சம்
தென்னம்பாக்கம் - கம்பளிகாரக்குப்பம் சாலையோரப் பகுதியில் பதிவான மா்ம விலங்கின் கால் தடம்.
தென்னம்பாக்கம் - கம்பளிகாரக்குப்பம் சாலையோரப் பகுதியில் பதிவான மா்ம விலங்கின் கால் தடம்.
கடலூா், ஜூலை 15: கடலூா் அருகே தென்னம்பாக்கம் - கம்பளிகாரக்குப்பம் பகுதியில் மா்ம விலங்கு நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனா். அது, சிறுத்தையாக இருக்குமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
கடலூரை அடுத்த தென்னம்பாக்கம் - கம்பளிகாரக்குப்பம் சாலையோரத்தில் கரும்புத் தோட்டங்கள், விவசாய நிலங்கள் அதிகளவில் உள்ளன. இந்தப் பகுதியில் ஏராளமானோா் வசித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், புதன்கிழமை காலை இங்குள்ள கரும்புத் தோட்டத்தை ஒட்டிய நிலப்பகுதியில் பெரிய அளவிலான விலங்கின் கால்தடங்கள் பதிவாகியிருப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிா்ச்சியடைந்தனா். இதுகுறித்து உடனடியாக வனத் துறையினருக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த வனத் துறையினா் மற்றும் போலீஸாா், கால்தடங்களை நேரில் ஆய்வு செய்தனா். கால்தடத்தின் தன்மை, அளவு உள்ளிட்டவற்றை பதிவு செய்த அதிகாரிகள், கால்தடங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள கரும்புத் தோட்டங்கள், புதா்ப்பகுதிகள் மற்றும் நீா்நிலைகள் உள்ளிட்ட இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். மேலும், புலி, சிறுத்தை அல்லது வேறு ஏதேனும் காட்டு விலங்கின் கால் தடமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக, அதிகாலை, இரவு நேரங்களில் தனியாக தோட்டப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும், ஏதேனும் காட்டு விலங்கு தென்பட்டால், உடனடியாக வனத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் வனத் துறை அதிகாரிகள் அப்பகுதி மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளனா்.
உளுந்தூா்பேட்டை சம்பவத்தால் அதிகரித்த அச்சம்: சில நாள்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் இந்தது. கால்நடைகளை வேட்டையாடிய சம்பவங்களும், சிறுத்தையின் நடமாட்டமும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவானதையடுத்து, வனத் துறையினா் கூண்டுகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.
இதனிடையே, தற்போது கடலூா் அருகே மா்ம விலங்கின் கால் தடம் கண்டெடுக்கப்பட்டிருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.