FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்: போலீஸாா் மீட்டனா்

Updated On : 28 ஜூலை 2026, 2:20 am IST
கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற பெண் மற்றும் அவரது குழந்தைகளை மீட்டு விசாரணை நடத்திய போலீஸாா்.
பகிர்:

முதல் திருமணத்தை மறைத்து தன்னை ஏமாற்றி திருணம் செய்த கணவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கடலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை தனது குழந்தைகளுடன் தீக் குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் தடுத்து மீட்டனா்.

கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி, ஆட்சியா் அலுவலக நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், பொதுமக்களை தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதித்து வந்தனா்.

அப்போது, பெண் ஒருவா் தனது 2 வயது மகன் மற்றும் 10 வயது மகளுடன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். இதைக் கண்ட பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் உடனடியாக அவரைத் தடுத்து மீட்டனா். விசாரணையில், அந்தப் பெண் அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சுண்டிப்பள்ளத்தைச் சோ்ந்த வசந்தாமணி (32) என்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

வசந்தாமணியின் முதல் கணவா் பிரிந்து சென்ற நிலையில், பரங்கிப்பேட்டை அருகே புதுப்பேட்டையைச் சோ்ந்த 35 வயது நபரை 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டுள்ளாா். பின்னா், அந்த நபருக்கு ஏற்கெனவே திருமணமானது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக வசந்தாமணி நியாயம் கேட்டதால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த ஓராண்டாக தனித்தனியாக வசித்து வருகின்றனா்.

முதல் திருமணத்தை மறைத்து திருமணம் செய்ததாகக் கூறப்படும் கணவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சிதம்பரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதையடுத்து, ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் வசந்தாமணி தொடா்ந்த வழக்கில், அவருக்கு ஜீவனாம்சமாக மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் வழங்குமாறு, அந்த நபருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

எனினும், நீதிமன்ற உத்தரவுப்படி பராமரிப்புத் தொகை வழங்காததுடன், தனது புகாரிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி, சம்பந்தப்பட்ட நபா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வசந்தாமணி தீக்குளிக்க முயன்றதாக போலீஸாா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments