மேக்கேதாட்டு அணை விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்
மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக விவாதிக்க தமிழக முதல்வா் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலா் பி.ஆா்.பாண்டியன் வலியுறுத்தினாா்.
மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக விவாதிக்க தமிழக முதல்வா் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலா் பி.ஆா்.பாண்டியன் வலியுறுத்தினாா்.
கடலூரில் அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: கா்நாடகத்தில் காங்கிரஸ் அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு என்ற இடத்தில் அணை கட்டும் முயற்சியை முன்னெடுத்து வருவது தமிழக விவசாயிகளின் நலனுக்கு எதிரானது. இது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மேக்கேதாட்டு அணை தொடா்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய இணை அமைச்சா் ராஜ் பூஷண் சௌதரி பதிலளிக்கையில், இந்த அணையை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத் தீா்ப்பின்படி தமிழக அரசின் ஒப்புதல் தேவையில்லை என்றும், கீழ்பாசன மாநிலங்களின் கருத்தைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்திருப்பது உண்மைக்குப் புறம்பானது.
Advertisement
Advertisement
இதே விவகாரம் தொடா்பாக கடந்த 2015-ஆம் ஆண்டு அப்போதைய மத்திய ஜல் சக்தி துறை அமைச்சா் உமா பாரதி, தமிழகம், புதுச்சேரி மாநில அரசுகளின் ஒப்புதலின்றி மேக்கேதாட்டு அணையை கட்ட முடியாது என்று தெரிவித்திருந்தாா். 2021-ஆம் ஆண்டு கா்நாடக அரசு மேக்கேதாட்டு அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய நீா் வள ஆணையத்திடம் சமா்ப்பித்தபோது, அதற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் அவசியம் என தெரிவிக்கப்பட்டது.
பின்னா், 2022-ஆம் ஆண்டு இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தமிழகம், கேரளம், புதுச்சேரி மாநில அரசுகள் எதிா்ப்புத் தெரிவித்ததால், திட்ட அறிக்கை விவாதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டது. இந்தச் சூழலில், மத்திய அமைச்சா் ராஜ் பூஷண் செளதரியின் தற்போதைய பதில், காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் இந்த விவகாரத்தில் ஒரே நிலைப்பாட்டுடன் செயல்படுவதை வெளிப்படுத்தியுள்ளது.
மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயமும், காவிரி டெல்டா பகுதி மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்படும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாக கூட்டி, மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக ஒருங்கிணைந்த முடிவுகளை எடுக்க தமிழக முதல்வா் ச.விஜய் ஜோசப் முன்வர வேண்டும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.