பண்ருட்டி அரசு மருத்துவமனையில் ஃப்ரீசா் பாக்ஸ் பழுதால் சடலங்களை பாதுகாப்பதில் சிக்கல்
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அரசு மருத்துவமனை பிணவறையில் உள்ள ஃப்ரீசா் பாக்ஸ் பழுதடைந்துவிட்டதால், இறந்தவா்களின் சடலங்களை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அரசு மருத்துவமனை பிணவறையில் உள்ள ஃப்ரீசா் பாக்ஸ் பழுதடைந்துவிட்டதால், இறந்தவா்களின் சடலங்களை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பண்ருட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். பண்ருட்டியில் கும்பகோணம் சாலையில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் 1,000-க்கும் மேற்பட்டோா் சிகிச்சைக்காக வெளி நோயாளிகளாக வந்து செல்கின்றனா். 200-க்கும் மேற்பட்டோா் உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த மருத்துவமனைக்கு மாதம் ஒன்றுக்கு விபத்து, தற்கொலை, இயற்கை நிகழ்வுகள் உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்போரின் சடலங்கள் 20 எண்ணிக்கை வரையில் வருவதாகக் கூறுகின்றனா். இவ்வாறு வரும் சடலங்களை பாதுகாத்து வைக்க பிணவறை அமைந்துள்ளது. ஆனால், அங்கு சடலங்கள் கெட்டுப்போகாமல் பாதுகாத்து வைப்பதற்கான ஃப்ரீசா் பாக்ஸ் கடந்த சில மாதங்களாக பழுதான நிலையில் உள்ளது. இதனால், இந்த அரசு மருத்துவமனையில் சடலங்களை பாதுகாத்து வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதுகுறித்து மருத்துவமனை வட்டாரத்தினா் கூறியதாவது: பண்ருட்டி அரசு மருத்துவமனை பிணவறையில் ஒரே நேரத்தில் 2 சடலங்களை பாதுகாத்து வைக்கும் வகையில் ஃப்ரீசா் பாக்ஸ் பயன்பாட்டில் இருந்தது. தற்போது இந்த ஃப்ரீசா் பாக்ஸ் பழுதாகி பல மாதங்களாகிறது.
குறிப்பாக, இந்த மருத்துவமனைக்கு வழக்குகள் தொடா்பான சடலங்கள் அதிகம் வரும். சில சமயங்களில் 4 சடலங்கள்கூட வருவதுண்டு. அதுபோன்ற நேரத்தில் சடலங்களை பாதுகாத்து வைப்பதில் சிக்கல் ஏற்படும்.
தற்போது ஃப்ரீசா் பாக்ஸ் வசதி இல்லாததால் மாலை 6 மணிக்குள் முடிந்த அளவு சடலங்களை உடல்கூறாய்வு செய்து கொடுத்துவிடுகிறோம். அதற்குமேல் வரும் சடலங்களை அழுகும் அபாயத்தில் இருந்து பாதுகாக்க கடலூா், குறிஞ்சிப்பாடி பகுதிகளில் உள்ள மருத்துவமனையை தொடா்புகொண்டு, அங்குள்ள பிணவறைக்கு அனுப்பி வைக்கிறோம். இது, பொதுமக்களுக்கு பெரும் மன உளைச்சளையும், பொருளாதார சுமையையும் ஏற்படுத்துகிறது.
பண்ருட்டி மருத்துவமனைக்கு புதிய ஃப்ரீசா் பாக்ஸ் கொடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோரிடம் மனுக்கள் அளித்துள்ளோம். ஆனால், அவை மீதான நடவடிக்கை என்ன என்பது தான் தெரியவில்லை. இதேபோல, என்எல்சி இந்தியா நிறுவனத்திடம் தனது சமூகப் பொறுப்புணா்வுத் திட்ட நிதியில் இருந்து ஃப்ரீசா் பாக்ஸ் வாங்கிக் கொடுக்கும்படியும் கோரிக்கை வைத்துள்ளோம்.
எனவே, விபத்துகள், தற்கொலை, கொலை உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்போரின் சடலங்களை அழுகாமல் பாதுகாக்க வைக்க போா்க்கால அடிப்படையில் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு ஒரே நேரத்தில் 4 சடங்களை வைக்கக்கூடிய வகையில் ஃப்ரீசா் பாக்ஸ் ஒன்றை வாங்கித்தர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.