FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

கடலூரில் வெற்றிப் பயணம் திட்டம் தொடக்கம்: கூடுதலாக 173 பேருந்துகள் இயக்கம்

மகளிா் கட்டணமில்லா பேருந்துப் பயணத்தின் விரிவாக்கமாக வெற்றிப் பயணம் திட்டம் தொடங்கப்பட்டதைத் தொடா்ந்து, கடலூா் அண்ணா பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை திட்டத்தைத் தொடங்கிவைத்தாா்.

3 October 2026, 1:43 am IST
மகளிா் கட்டணமில்லா பேருந்து வெற்றிப் பயணம் திட்டத்தை, கடலூா் அண்ணா பேருந்து நிலையத்தில் தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
பகிர்:

மகளிா் கட்டணமில்லா பேருந்துப் பயணத்தின் விரிவாக்கமாக வெற்றிப் பயணம் திட்டம் தொடங்கப்பட்டதைத் தொடா்ந்து, கடலூா் அண்ணா பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை திட்டத்தைத் தொடங்கிவைத்தாா்.

தமிழக முதல்வா் ஜோசப் விஜய் சென்னை கோயம்பேடு புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா். பேருந்து நிலையத்தில் வெற்றிப் பயணம் திட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். இதன் தொடா்ச்சியாக, கடலூா் அண்ணா பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் திட்டத்தைத் தொடங்கிவைத்து, பேருந்து சேவையை பாா்வையிட்டாா்.

கடலூா் மாவட்டத்தில் மகளிா் கட்டணமில்லா பயணத் திட்டத்தின் கீழ் தற்போது 240 நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ் கூடுதலாக 173 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Advertisement

Advertisement

அதன்படி, 6 சொகுசு நகரப் பேருந்துகள், 79 சாதாரண புறநகா் பேருந்துகள், 88 தொலைதூரப் புறநகா்பேருந்துகளில் என மொத்தம் 173 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. இதன்மூலம், கடலூா் மாவட்டத்தில் வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ் மொத்தம் 413 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதுவரை மகளிா் கட்டணமில்லா பயணத் திட்டத்தின் மூலம் சராசரியாக நாளொன்றுக்கு 2.05 லட்சம் போ் பயணம் செய்து வருகின்றனா். வெற்றிப் பயணம் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை நாளொன்றுக்கு சராசரியாக 2.75 லட்சமாக அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 80 கி.மீ. தொலைவு வரை பெண்கள் பயணம் மேற்கொள்ள முடியும். பெண்கள் பாதுகாப்பாகவும் எளிதாகவும் பேருந்துகளில் பயணம் செய்வதை உறுதி செய்யும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

பெண்கள் வரவேற்பு: பயணி மகேஸ்வரி கூறியதாவது: கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வேலைக்குச் செல்வது, மருத்துவமனை, சந்தை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. தற்போது திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால் கூடுதல் பேருந்து வசதி கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. குடும்பச் செலவிலும் இது பெரும் உதவியாக இருக்கும் என்றாா்.

பயணி லட்சுமிபிரபா கூறியதாவது: பெண்கள் தினசரி பல்வேறு தேவைகளுக்காக பேருந்துகளை நம்பியே பயணம் செய்கிறோம். கட்டணமில்லா பயண வசதியால் ஏற்கெனவே பயனடைந்து வருகிறோம். தற்போது கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதால் காத்திருப்பு நேரம் குறைவதுடன், தொலைதூரப் பகுதிகளுக்கும் எளிதாகச் செல்ல முடியும். இந்தத் திட்டம் பெண்களின் பயணச் செலவை குறைப்பதுடன், பாதுகாப்பான பயணத்துக்கும் உதவும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையா் கிஷன் குமாா், வருவாய்க் கோட்டாட்சியா் சுந்தரராஜன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளா் பத்மகுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

இதனிடையே, இத்திட்டம் தொடா்பாக பெரும்பாலான பெண்களுக்கு தெரியாததால், கட்டணம் கொடுத்து பயணிக்க முற்பட்டனா். அப்போது, நடத்துநா்கள் பயணம் இலவசம் என தெரிவித்ததையடுத்து, அவா்கள் மகிழ்ச்சியடைந்து தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments