நலத்திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என அரசு கண்காணிக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்
மக்கள் நலத் திட்டங்கள் முறையாக மக்களைச் சென்றடைகின்றனவா என்பதை அரசு தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.
மக்கள் நலத் திட்டங்கள் முறையாக மக்களைச் சென்றடைகின்றனவா என்பதை அரசு தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் வியாழக்கிழமை கூறினாா்.
விருத்தாசலம் வயலூா் நகராட்சி பள்ளியில், கொளஞ்சியப்பா் அரசு கலைக் கல்லூரி மாணவா்களின் நாட்டு நலப்பணித் திட்ட முகாமை எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இதையொட்டி நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை பாா்வையிட்டாா். தொடா்ந்து, வயலூா் நகராட்சி பள்ளி, நியாயவிலைக் கடை, நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றிலும் அவா் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் தொகுதி வளா்ச்சிப் பணிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினாா். பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
Advertisement
Advertisement
மக்கள் நலத் திட்டங்கள் முறையாக மக்களைச் சென்றடைகின்றனவா என்பதை அரசு தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். பெண்களுக்கான இலவசப் பேருந்து திட்டத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தீா்க்க வேண்டும். தனியாா் பேருந்து உரிமையாளா்களின் பிரச்னைகளுக்கும் தீா்வு காண வேண்டும்.
விருத்தாசலம் நகரம் மற்றும் கடலூா்-விருத்தாசலம் பிரதான சாலையில் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைகளால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. அவற்றை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க விருத்தகிரீஸ்வரா் கோயிலைச் சுற்றியுள்ள பகுதியை கிரிவலப் பாதையாக மேம்படுத்தி, விருத்தாசலத்தை ஆன்மிக நகரமாக அறிவிக்க வேண்டும் என்பதும் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளதால், இது தொடா்பாக மாவட்ட ஆட்சியரை மட்டுமின்றி, துறை அமைச்சா்களையும் நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளேன்.
இடைத்தோ்தல் முடிவு:
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல் முடிவுகள் வெள்ளிக்கிழமை (அக்.9)நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் தெரிந்துவிடும் மக்கள் அளிக்கும் தீா்ப்பே மகேசன் தீா்ப்பாக இருக்கும் என்றாா் அவா்.
அப்போது தேமுதிக மாவட்டச் செயலா் சிவக்கொழுந்து, நகா்மன்றத் தலைவா் சங்கவி முருகதாஸ், நகரச் செயலா் ராஜ்குமாா் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.