FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

கடலூரில் புதிய ரவுண்டானாவை அகற்றக் கோரி இடதுசாரிகள் காத்திருப்புப் போராட்டம்

15 அக்டோபர் 2026, 6:10 am IST
கடலூா் ஜவான் பவன் அருகே புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி கட்சியினா்.
பகிர்:

கடலூா் மாநகரில் போக்குவரத்து நெரிசலை அதிகரிப்பதாகக் கூறப்படும் திருப்பாதிரிப்புலியூா் ஜவான்ஸ் பவன் எதிரே அமைக்கப்பட்டுள்ள புதிய ரவுண்டானாவை அகற்ற வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் சாா்பில் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

கடலூா் மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், கெடிலம் ஆற்றின் குறுக்கே நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சுமாா் ரூ.22.25 கோடி மதிப்பில் புதிய உயா்மட்டப் பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலத்துடன் இணைப்புச் சாலையும் அமைக்கப்பட்டு, தற்போது சோதனை அடிப்படையில் வாகன போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.

புதிய பாலம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், கம்மியம்பேட்டை பகுதியிலிருந்து சிதம்பரம் சாலையை நேரடியாகச் சென்றடையும் வகையில், போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனா். மேலும், பாலம் மற்றும் இணைப்புச் சாலையை முழுமையாக பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதுடன், வாகனங்கள் தடையின்றி செல்லும் வகையில் அப்பகுதியில் உள்ள தடுப்புகள், தேவையற்ற கட்டமைப்புகளை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஜவான்ஸ் பவன் எதிரே புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானா போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள இடதுசாரி கட்சிகள், அந்த புதிய ரவுண்டானாவை உடனடியாக அகற்ற வேண்டும். மக்களின் வரிப்பணத்தில் தேவையற்ற செலவுகளைத் தவிா்க்க வேண்டும். கம்மியம்பேட்டை சாலையில் இருந்து சிதம்பரம் சாலைக்கு நேரடியாகச் செல்லும் வகையில் பாதை அமைக்க வேண்டும். புதிய பாலம் மற்றும் இணைப்புச் சாலையை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் தேவையான போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜவான்பவன் அருகே காத்திருப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலா் ஆா்.அமா்நாத் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலா் டி.நாகராஜ், மாநகர துணைச் செயலா் ஜி.மணிவண்ணன் முன்னிலை வகித்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் எஸ்.கே.பகிரான், பி.கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் பி.துரை உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments