கடலூரில் புதிய ஆதாா் சேவா கேந்திரா மையம் திறப்பு
கடலூா் மாநகராட்சி, எஸ்.என்.சாவடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆதாா் சேவா கேந்திரா மையத்தை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
கடலூா் மாநகராட்சி, எஸ்.என்.சாவடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆதாா் சேவா கேந்திரா மையத்தை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
தொடா்ந்து ஆட்சியா் கூறியதாவது: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன ஆதாா் சேவை மையத்தின் மூலம் கடலூா் நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் ஆதாா் தொடா்பான சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
பொதுமக்களுக்கு தடையற்ற ஆதாா் சேவைகளை வழங்கும் வகையில், இம்மையத்தில் 8 செயல்பாட்டு கருவித் தொகுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பொது விடுமுறை நாள்களைத் தவிர மற்ற அனைத்து நாள்களிலும் மையம் செயல்படும். இங்கு புதிய ஆதாா் பதிவு, ஆதாா் அட்டையில் உள்ள மக்கள்தொகை விவரங்கள் மற்றும் பயோமெட்ரிக் அடையாள விவரங்களைப் புதுப்பித்தல், ஆதாா் தொடா்பான குறைகளைப் பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படும்.
Advertisement
Advertisement
உதவிக்கு அழைக்கலாம்:
ஆதாா் எண் வைத்திருப்பவா்கள் தங்களது குறைகளையும் இம்மையத்தில் பதிவு செய்யலாம். அவற்றை மண்டல அலுவலகத்தின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீா்வு காணப்படும். ஆதாா் தொடா்பான உதவிகளுக்கு 1947 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.
இந்த ஆதாா் சேவா கேந்திரா மையம் குறித்து அதன் அதிகாரிகள் கூறியது: இந்த மையம் தொடங்கப்பட்டதன் மூலம், தமிழகம் முழுவதும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சாா்பில் செயல்படும் ஆதாா் சேவா கேந்திரா மையங்களின் எண்ணிக்கை 15-ஆக உயா்ந்துள்ளது. மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 15 புதிய ஆதாா் சேவா கேந்திரா மையங்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளன.
அனைத்து தரப்பினரும் எளிதில் அணுகும் வகையில், சக்கர நாற்காலி வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள், பிரத்யேக குறைதீா்க்கும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இம்மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆதாா் சேவைகளைப் பெற விரும்புவோா், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் முன்பதிவு இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். புதிய மையத்தின் அன்றாட செயல்பாடுகளை பி.எல்.எஸ். இன்டா்நேஷனல் நிறுவனம் நிா்வகிக்கும் என்றனா்.
நிகழ்ச்சியில் பெங்களூரு மண்டல ஆதாா் சேவா கேந்திரா மேலாளா் ராகுல் ஜெயந்த், உதவி மேலாளா் வெங்கட் மற்றும் ஆதாா் சேவை மையப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.