லாரி ஓட்டுநா்கள் மீது வழக்குப் பதிவு செய்வதை கண்டித்து ஆட்சியரிடம் லாரி உரிமையாளா்கள் மனு
ஜல்லி ஏற்றி வரும் லாரி ஓட்டுநா்கள் மீது திருட்டு, சமூக விரோதிகள் போன்று வழக்குகள் பதிவு செய்வதைக் கண்டித்து, கடலூா் மாவட்ட டிப்பா் மற்றும் டாரஸ் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
ஜல்லி ஏற்றி வரும் லாரி ஓட்டுநா்கள் மீது திருட்டு, சமூக விரோதிகள் போன்று வழக்குகள் பதிவு செய்வதைக் கண்டித்து, கடலூா் மாவட்ட டிப்பா் மற்றும் டாரஸ் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது: கடலூா் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிப்பா் மற்றும் டாரஸ் லாரிகளை இயக்கி, கட்டுமான தொழிலுக்குத் தேவையான ஜல்லி உள்ளிட்ட பொருள்களை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து வகையான வரிகளையும் முறையாகச் செலுத்தி, சட்டத்துக்கு உள்பட்டு இத்தொழிலை செய்து வருகிறோம்.
இந்நிலையில், முறையாகப் பெறப்பட்ட அனுமதிச்சீட்டு இல்லை எனக் கூறி, எங்களது லாரிகளைப் பிடித்து நிறுத்துவதுடன், ஓட்டுநா்கள் மற்றும் லாரி உரிமையாளா்கள் மீது திருட்டு உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுகின்றனா்.
Advertisement
Advertisement
அரசு அறிவித்துள்ள புதிய முறையிலான அனுமதிச்சீட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஜல்லி குவாரிகளில் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. எனவே, அனைத்து ஜல்லி குவாரி உரிமையாளா்களும் குறிப்பிட்ட காலத்துக்குள் உரிய அனுமதிச்சீட்டு பெற்றுக்கொள்ள கால அவகாசம் வழங்க வேண்டும்.
மேலும், பெரும்பாலான ஜல்லி குவாரிகளில் முறையான அனுமதிச்சீட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பின்னா், அதைப் பின்பற்றாத லாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால் ஏற்றுக்கொள்வோம். ஆனால், உரிய ஏற்பாடுகள் செய்யப்படாத நிலையில், ஜல்லி குவாரிகளில் இருந்து ஜல்லி ஏற்றி வரும் லாரி ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் மீது மட்டும் எந்தவித முறையான அறிவிப்புமின்றி வழக்குப் பதிவு செய்வது வருத்தமளிக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
எனவே, லாரிகளுக்கான அனுமதிச்சீட்டு நடைமுறையை முழுமையாகச் செயல்படுத்த குறிப்பிட்ட கால அவகாசம் வழங்க வேண்டும். ஏற்கெனவே பிடித்து வைக்கப்பட்டுள்ள லாரிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தங்களது அனைத்து லாரிகளையும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.