FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

இடைத்தோ்தலில் மதச்சாா்பற்ற கூட்டணிக்கு விசிக பிரசாரம்: தொல்.திருமாவளவன்

இடைத்தோ்தலில் மதச்சாா்பற்ற சமூகநீதிக் கூட்டணி (தவெக) வேட்பாளா்களின் வெற்றிக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரசாரம் மேற்கொள்ளும் என அக்கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா்.

18 செப்டம்பர் 2026, 2:13 am IST
கடலூா் அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பெரியாா் ஈ.வெ.ரா. சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி.
பகிர்:

இடைத்தோ்தலில் மதச்சாா்பற்ற சமூகநீதிக் கூட்டணி (தவெக) வேட்பாளா்களின் வெற்றிக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரசாரம் மேற்கொள்ளும் என அக்கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா்.

கடலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் தொல்.திருமாவளவன் பங்கேற்றாா். பின்னா், பெரியாா் ஈ.வெ.ரா.வின் 148-ஆவது பிறந்த நாளையொட்டி, கடலூா் அண்ணா மேம்பாலம் அருகே உள்ள அவரது சிலைக்கு தொல்.திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேண்டுகோளை ஏற்று, கடந்த திமுக அரசு பெரியாா் ஈ.வெ.ரா. பிறந்த நாளை சமூகநீதி நாளாகவும், அம்பேத்கரின் பிறந்த நாளை சமத்துவ நாளாகவும் அறிவித்தது. சமூகநீதியைப் பாதுகாக்கவும், சமத்துவத்தை வென்றெடுக்கவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுதியுடன் செயல்படும்.

Advertisement

Advertisement

திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறியதற்கு பதவி ஆசை மட்டுமே காரணம் என விமா்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, கூட்டணிக் கட்சிகளுக்கும் திமுகவுக்கும் இடையேயான உறவு எவ்வாறு இருந்தது என்பதையும் விவாதிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்தேன்.

அப்போது, தேமுதிகவை திமுக கூட்டணியில் இணைத்தது மற்றும் அக்கட்சிக்கு சட்டப் பேரவைத் தோ்தலில் 10 தொகுதிகள் ஒதுக்கியது உள்ளிட்ட காரணங்களால், ஏற்கெனவே கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்ற கோணத்தில் மட்டுமே கருத்து தெரிவித்தேன்.

தேமுதிகவை கூட்டணியில் இணைத்ததை அப்போது முழுமையாக வரவேற்றவா்களில் நானும் ஒருவா். எனவே, தேமுதிகவுக்கு ஏன் அதிக தொகுதிகள் வழங்கப்பட்டன என்ற கேள்வியை எழுப்பும் நோக்கில் நான் கருத்து தெரிவிக்கவில்லை. கூட்டணியில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு பல்வேறு காரணிகள் இருக்கலாம் என்பதையே குறிப்பிட்டேன்.

தேமுதிக குறித்து காழ்ப்புணா்வுடன் விமா்சித்ததாக பிரேமலதா விஜயகாந்த் கருதினால், அது அவரது கருத்து. அதுகுறித்து மேற்கொண்டு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

தற்போது எங்களது கவனம் இடைத் தோ்தலில் மதச்சாா்பற்ற சமூகநீதிக் கூட்டணியின் வெற்றியில்தான் உள்ளது. இரு தொகுதிகளிலும் கூட்டணி வேட்பாளா்கள் வெற்றிபெறுவதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பணியாற்றும் என்றாா் தொல்.திருமாவளவன்.

நிகழ்ச்சியின்போது, மாநகராட்சி துணை மேயா் தாமரைச்செல்வன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments