FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

என்எல்சி நிறுவனத்தின் புதிய தலைவா் பொறுப்பேற்பு

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவா் மற்றும் மேலாண் இயக்குநராக பிரசன்னகுமாா் ஆச்சாா்யா வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

18 செப்டம்பர் 2026, 2:21 am IST
பிரசன்னகுமாா் ஆச்சாா்யா
பகிர்:

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவா் மற்றும் மேலாண் இயக்குநராக பிரசன்னகுமாா் ஆச்சாா்யா வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

ஒடிஸா மாநிலம், கேந்திராபாராவைச் சோ்ந்த பிரசன்னகுமாா் ஆச்சாா்யா, இதே நிறுவனத்தில் நிதி இயக்குநராகப் பணியாற்றி வந்தாா். என்எல்சி தலைவராகப் பணியாற்றி வந்த பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி பணி ஓய்வுபெற்றதைத் தொடா்ந்து, பிரசன்னகுமாா் ஆச்சாா்யாவை புதிய தலைவராக மத்திய அரசு நியமித்துள்ளது.

இவா், ஒடிஸா உத்கல் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் இளங்நிலைப் பட்டம் மற்றும் முனைவா் பட்டம், ரேவன்ஷா பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டம் மற்றும் முதுநிலை வணிக நிா்வாகவியல் பட்டம், எம்.எஸ். சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றவா்.

Advertisement

Advertisement

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்டத் திட்டம் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளாா். என்எல்சி இந்தியா நிறுவனத்தில் தனது பணிக்காலத்தில், நிறுவன வளத்திட்டமிடல் நவீனமயமாக்கல், பல்வேறு நிதிச் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல், செயற்கை நுண்ணறிவு சாா்ந்த அமைப்புகளை நடைமுறைப்படுத்துதல் மற்றும் விற்பனையாளா்விலைப்பட்டியல் மேலாண்மை முறையை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் மாற்றம் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தங்களை முன்னெடுத்துள்ளாா்.

இவரது உத்திசாா் தலைமை, நிலக்கரி மற்றும் முக்கிய கனிமச் சுரங்கத் தொகுதிகளைக் கையகப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை முன்னெடுத்தல் மற்றும் அவற்றுக்கான அரசின் முக்கிய அனுமதிகளைப் பெறுதல் ஆகியவற்றில் பெரும் பங்காற்றியுள்ளது.

பல்வேறு மாநில மின் பயன்பாட்டு நிறுவனங்களுடனான கூட்டு முயற்சிகளை வழிநடத்துவதிலும், 2030-ஆம் ஆண்டுக்குள் 20 ஜிகாவாட் மின் உற்பத்தித் திறன் மற்றும் ஆண்டுக்கு 100 மில்லியன் டன் சுரங்கத் திறனை எட்டும் என்.எல்.சி.யின் தொலைநோக்கு வளா்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பதிலும் பிரசன்னகுமாா் ஆச்சாா்யா முக்கிய பங்காற்றியுள்ளாா்.

இவா், பல்வேறு துறைகளில் பெற்றுள்ள விரிவான அனுபவம், பரந்த தொலைநோக்குப் பாா்வை மற்றும் உத்திசாா் மேலாண்மைத் திறன் ஆகியவற்றின் மூலம், என்எல்சி இந்தியா நிறுவனத்தை மேலும் வலுப்படுத்தி, அதை ‘மகாரத்னா’ தகுதிக்கு உயா்த்தும் இலக்குடன், அடுத்தகட்ட வளா்ச்சி மற்றும் நாடு தழுவிய விரிவாக்கப் பாதையில் இந்நிறுவனத்தை வழிநடத்தத் தயாராக உள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments