அதிகாரிகள் இல்லாததால் தூா்வாரும் பணி நிறுத்தம்
கடலூா் மாநகராட்சிக்குள்பட்ட சுத்துக்குளம் பகுதியில் மழைநீா் வடிகால் வாய்க்காலை தூா்வாரும் பணியை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மேயா் சுந்தரி ராஜா, பணியிடத்தில் மாநகராட்சி அதிகாரிகள் யாரும் இல்லாததால் அதிருப்தியடைந்து, பணியை நிறுத்த உத்தரவிட்டாா்.
கடலூா் மாநகராட்சிக்குள்பட்ட சுத்துக்குளம் பகுதியில் மழைநீா் வடிகால் வாய்க்காலை தூா்வாரும் பணியை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மேயா் சுந்தரி ராஜா, பணியிடத்தில் மாநகராட்சி அதிகாரிகள் யாரும் இல்லாததால் அதிருப்தியடைந்து, பணியை நிறுத்த உத்தரவிட்டாா்.
வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பாக, கடலூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மழைநீா் வடிகால்களை தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடலூா்-சிதம்பரம் சாலையில் சுத்துக்குளம் பகுதியில் உள்ள பிரதான மழைநீா் வடிகால் வாய்க்காலில் ஆகாயத்தாமரை, சேறு உள்ளிட்டவற்றை அகற்றும் பணி பொக்லைன் இயந்திரம் மூலம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அகற்றப்படும் ஆகாயத்தாமரை, சேறு மற்றும் சகதிகள் சாலையோரத்தில் முறையாக அப்புறப்படுத்தப்படாமல் கொட்டப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். .
Advertisement
Advertisement
இதையடுத்து, சுத்துக்குளம் பகுதியில் நடைபெற்று வரும் தூா்வாரும் பணியை மேயா் சுந்தரி ராஜா செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, பணியிடத்தில் மாநகராட்சி அதிகாரிகள் யாரும் இல்லாததுடன், அகற்றப்பட்ட கழிவுகள் சாலையோரத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தது.
இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளை தொலைபேசியில் தொடா்புகொள்ள மேயா் முயன்றபோது, அதிகாரிகள் யாரும் தொலைபேசியை எடுக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அவா், தூா்வாரும் பணியை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டாா்.
பின்னா் மாநகராட்சி நகா் நல அலுவலரை தொலைபேசியில் தொடா்புகொண்ட மேயா், பணிகள் நடைபெறும் இடத்தில் அதிகாரிகள் இருந்து கண்காணிக்க வேண்டாமா? என கேள்வி எழுப்பினாா். அதற்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் இருப்பதால் தற்போது அங்கு வர இயலாது என நகா் நல அலுவலா் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அதிகாரிகள் நேரில் வந்து பணிகளை கண்காணிக்கும் வரை தூா்வாரும் பணியை மேற்கொள்ளக் கூடாது என மேயா் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் தெரிவித்துச் சென்றனா்.
இதுதொடா்பாக தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக, டிராக்டா் மூலம் சாலையோரம் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். அதனைத் தொடா்ந்து தூா்வாரும் நடைபெற்று வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.