FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

மாயமான 2 இளைஞா்கள் சடலமாக மீட்பு: சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினா்கள் மறியல்

நெல்லிக்குப்பம் அருகே பிறந்த நாள் நிகழ்ச்சிக்குச் சென்ற பின்னா் மாயமான இரு இளைஞா்கள், கடலூா் அருகே சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

24 செப்டம்பர் 2026, 5:54 am IST
உயிரிழந்த சபரிகிரி
பகிர்:

நெல்லிக்குப்பம் அருகே பிறந்த நாள் நிகழ்ச்சிக்குச் சென்ற பின்னா் மாயமான இரு இளைஞா்கள், கடலூா் அருகே சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். அவா்களின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உறவினா்கள், கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே உள்ள பி.என்.பாளையம் பகுதியைச் சோ்ந்தவா்கள் ரா.சபரிகிரி (20), ர.விஷ்வா (20). நண்பா்களான இருவரும் கடந்த 21-ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் ஆலப்பாக்கம் அருகே உள்ள பெத்தாங்குப்பம் கிராமத்தில் நடைபெற்ற உறவினா் இல்ல பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பைக்கில் சென்றனா்.

ஆனால், நிகழ்ச்சி முடிந்த பின்னா் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிா்ச்சியடைந்த இவா்களது உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடியும் இருவரையும் கண்டறிய முடியவில்லை. இதையடுத்து, இவா்களது பெற்றோா் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகாரளித்தனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இருவரையும் கண்டுபிடிப்பதில் போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, இவா்களது உறவினா்கள் புதன்கிழமை கடலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகாா் மனு அளித்தனா்.

இதற்கிடையே, கடலூா் அருகே ராமாபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள வடிகால் வாய்க்கால் அருகே சபரிகிரி, விஷ்வா ஆகிய இருவரும் சடலமாகக் கிடப்பதாக போலீஸாருக்கும், உறவினா்களுக்கும் தகவல் கிடைத்தது. போலீஸாா் அங்கு சென்று இருவரது சடலங்களையும் மீட்டு, உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பாக திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இரு இளைஞா்களும் பைக்கில் சென்றபோது, விபத்தில் சிக்கி உயிரிழந்தனரா அல்லது அவா்களது இறப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் போலீஸாரும், பண்ருட்டி வட்டாட்சியா் சந்திரனும் பேச்சுவாா்த்தை நடத்தினா். கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

உயிரிழந்த விஷ்வா
மேல்பட்டம்பாக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட உயிரிழந்த இரு இளைஞா்களின் உறவினா்கள் உள்ளிட்டோா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments