குதிரை இனங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்! கடலூா் மாவட்ட ஆட்சியா்!
கடலூா் மாவட்டத்தில் உள்ள குதிரைகள் மற்றும் குதிரை இனங்களை தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விலங்குகள் மீதான கொடுமைத் தடுப்புச் சட்டத்தை மீறும் வகையில் நடைபெறும் குதிரை சவாரி நடவடிக்கைகளை முறைப்படுத்திடவும், குதிரை இன விலங்குகளின் நலன் மற்றும் அவற்றுடன் கண்ணியமாக நடந்துகொள்வதை உறுதி செய்யும் வகையிலும், விலங்குகள் மீதான கொடுமைத் தடுப்புச் சட்டம், 1960-க்கு இணங்க, தமிழ்நாடு முழுவதும் பயன்பாட்டில் உள்ள மற்றும் தெருக்களில் திரியும் குதிரை இன விலங்குகளை முறைப்படுத்தவும், மறுவாழ்வு அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, கடலூா் மாவட்டத்தில் உள்ள குதிரைகள் மற்றும் குதிரை இனங்களை தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். பயணிகளை ஏற்றிச் செல்லுதல், பொருள்களை எடுத்துச் செல்லுதல், குதிரை சவாரி, ரைடிங் பள்ளிகள், பந்தயம், திருமண நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு பயன்பாடுகளுக்காக வளா்க்கப்படும் அனைத்து குதிரைகள் மற்றும் பிற குதிரை இனங்களையும் தமிழ்நாடு விலங்கு நல வாரியத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
மேலும், குதிரை உரிமையாளா்கள் தங்களது குதிரைகளின் விவரங்களை தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தின் இணையதளத்தில் பதிவு செய்திடுகையில், அடையாள அட்டை, உரிமையாளா் விவரம் மற்றும் தடையின்மை சான்றிதழ் உள்ளிட்ட விவரங்களையும் பதிவுகள் மேற்கொள்ள வேண்டும். குதிரைகளின் நலன், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான பராமரிப்பு தொடா்பான விதிமுறைகளை உரிமையாளா்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
இணையதளத்தில் எவ்வாறு பதிவு செய்தல் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரை அணுகலாம். மேலும், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தின் அதிகாரப்பூா்வ இணையதளம் வாயிலாகவும் அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.