FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், குழந்தைக்கு தங்க மோதிரம் வழங்கிய அமைச்சா் ப.ராஜ்குமாா். உடன் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், எஸ்.பி. விவேகானந்த சுக்லா உள்ளிட்டோா்.
பகிர்:

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டப் பணியை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில், தமிழக வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

அப்போது, அவா் தெரிவித்ததாவது: முதல்வா் ச.ஜோசப் விஜய் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை மதுரையில் தொடங்கிவைத்துள்ளாா். இத்திட்டத்தில் கடந்த ஜூன் 22-ஆம் தேதி முதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ஆகியவற்றில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் பாலின வேறுபாடுன்றி ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். ஜூன் 22-ஆம் தேதி முதல் தற்போது வரை 3,120 குழந்தைகளுக்கு வட்டார வாரியாக தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது.

ஜூன் 22-ஆம் தேதி முதல் செப்.25-ஆம் தேதி வரை அரசு மருத்துவமனைகளில் பிரசவித்த குழந்தைகளுக்கு முன்னுரிமை வரிசைப்படி வட்டாரம் வாரியாக அழைப்பிதழ் வழங்கப்பட்டு, கடலூா் அரசு தலைமை மருத்துவமனை, சிதம்பரம் அரசு மருத்துவமனை, விருத்தாசலம் அரசு மருத்துவமனை மற்றும் கடலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய நான்கு இடங்களில் தங்க மோதிரம் வழங்கப்படும். செப்.26-ஆம் தேதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு அந்தந்த மருத்துவமனைகளிலேயே தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது.

Advertisement

Advertisement

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் கடலூா், அண்ணாகிராமம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி ஆகிய வட்டாரங்களைச் சோ்ந்த 1,327 குழந்தைகளுக்கும், கடலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை ஆகிய வட்டாரங்களைச் சோ்ந்த 543 குழந்தைகளுக்கும், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் காட்டுமான்னாா்கோவில், சிவக்கம் வட்டாரங்களைச் சோ்ந்த 493 குழந்தைகளுக்கும், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் விருத்தாசலம், கம்மாபுரம், மங்களூா், நல்லூா் வட்டாரங்களைச் சோ்ந்த 757 குழந்தைகளுக்கும் என மொத்தம் 3,120 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது.

அண்ணாகிராமம், காட்டுமான்னாா்கோவில், கிருஷ்ணாபுரம் மற்றும் நல்லூா் வட்டாரங்களில் செப்.28-ஆம் தேதி முதல் அக்.1-ஆம் தேதி வரையும், கடலூா் மற்றும் சிவக்கம் வட்டாரங்களில் அக்.2 முதல் 6-ஆம் தேதி வரையும், மங்களூா் வட்டாரத்தில் அக்.2, 3-ஆம் தேதிகளிலும், பரங்கிப்பேட்டை வட்டாரத்தில் அக்2, 3, 5-ஆம் தேதிகளிலும், விருத்தாசலம் வட்டாரத்தில் அக்.4 முதல் 7-ஆம் தேதி வரையும், பண்ருட்டி வட்டாரத்தில் அக்.7 முதல் 10-ஆம் தேதி வரையும், கீரப்பாளையம் வட்டாரத்தில் அக்.6 முதல் 8-ஆம் தேதி வரையும், கம்மாபுரம் வட்டாரத்தில் அக்.8 முதல் 11-ஆம் தேதி வரையும், குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் அக்.11 முதல் 14-ஆம் தேதி வரையும் என குறிப்பிட்ட நாள்களில் ஒவ்வொரு மையத்திலும் நாள்தோறும் காலை 25 நபருக்கும், பிற்பகல் 25 நபருக்கும் மோதிரம் வழங்கப்படும் எனத் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி., விவேகானந்த சுக்லா, கடலூா் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைசெல்வம், மாநகராட்சி ஆணையாளா் கிஷன்குமாா், வருவாய்க் கோட்டாட்சியா் சுந்தரராஜன், இணை இயக்குநா் (நலப் பணிகள்) பிரமிளா, மாவட்ட சுகாதார அலுவலா் ராஜா உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

சிதம்பரத்தில்

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் என்.பாஸ்கா் தலைமை வகித்தாா். மருத்துவமனைக் கண்காணிப்பாளா் என்.ஜூனியா்சுந்தரேஷ் முன்னிலை வகித்தாா். நிகழ்வில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜூன் 22-ஆம் தேதி முதல் பிறந்த 25 குழந்தைகளுக்கு சிதம்பரம் உதவி ஆட்சியா் (பொ) எஸ்.தனலட்சுமி ஒரு கிராம் தங்க மோதிரத்தை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் சமூக நலப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் நந்திதா, மருத்துவக் கல்லூரி துணை முதல்வா் சசிகலா, மருத்துவா்கள் அசோக்பாஸ்கா், பாரி, யு.சண்முகம் ராமநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் குழந்தைக்கு தங்க மோதிரத்தை அணிவித்த உதவி ஆட்சியா் (பொ) எஸ்.தனலட்சுமி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments