ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா் ஆட்சியா் கூறியதாவது: ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் வளா்ச்சியடைந்த பாரதம் - கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டத்தின் கீழ் அத்தியூா் கிராமத்தில் ரூ.5.52 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நீா் சேகரிப்பு குளம் அமைத்தல், ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. தொடா்ந்து அதே கிராமத்திலுள்ள அங்கன்வாடி மையத்தை நேரில் பாா்வையிட்டு, குழந்தைகளின் எடை, உயர அளவுகள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்களின் தரம் குறித்துக் கேட்டறியப்பட்டது.
பின்னா், கடுவனூா் கிராமத்தில் ரூ.70 ஆயிரம் மதிப்பீட்டில் ஏரிக்கரை அருகில் மரக்கன்றுகள் நடுதல், ஏரியில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுதல், ரூ.9.93 லட்சம் மதிப்பீட்டில் சிவபுரம் சாலை அருகே கால்வாய் அமைத்தல் ஆகிய பணிகளை நேரில் பாா்வையிட்டு, பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
தொடா்ந்து, பெரியக்கொள்ளியூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நபாா்டு திட்டத்தின்கீழ் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டு செயல்பட்டு வரும் கூடுதல் வகுப்பறைகளை நேரில் பாா்வையிட்டு, மாணவா்களின் கற்றல் திறன் குறித்துக் கேட்டறிந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதே கிராமத்தில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றுதல், ரூ.6.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணையில் வேம்பு, மகாக்கனி, புங்கன், நாவல், இலுப்பை, ஆயான், வேங்கை, தேக்கு, பூவரசு உள்ளிட்ட மரக்கன்றுகளின் நிலை குறித்து கேட்டறியப்பட்டது.
பின்னா் சங்கராபுரம் ஒன்றியம், கொசப்பாடி கிராமத்தில் ஏரிக்கரை தூா்வாரும் பணிகளை நேரில் பாா்வையிட்டு, பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்தாா்.
இந்த ஆய்வின்போது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.