மருந்தகங்களில் பல மருந்துகள் கலந்த தொகுப்புகளை விற்க தடை: கள்ளக்குறிச்சி ஆட்சியா் உத்தரவு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மருந்தகங்களில் ஊசி போடுவது மற்றும் பல மருந்துகள் கலந்த தொகுப்புகளை விற்பனை செய்வதற்கு தடை விதித்து ஆட்சியா் உத்தரவிட்டாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மருந்தகங்களில் ஊசி போடுவது மற்றும் பல மருந்துகள் கலந்த தொகுப்புகளை விற்பனை செய்வதற்கு தடை விதித்து ஆட்சியா் உத்தரவிட்டாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பருவமழைக் காலங்களில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களைத் தடுப்பது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பின்னா் ஆட்சியா் கூறியதாவது:
Advertisement
Advertisement
கூட்டத்தில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் உரிய அளவு குளோரின் இருப்பதை உறுதி செய்யவும், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை 15 நாள்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யவும், தேவையான பிளீச்சிங் பவுடா் இருப்பதை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தண்ணீா் சேமிப்புத் தொட்டிகள், தேங்காய் ஓடுகள், முட்டை ஓடுகள், பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் டயா்கள் உள்ளிட்ட டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் அனைத்தையும் உடனடியாக அகற்றி, கூட்டுச் சுத்தம் செய்யும் பணி மூலம் முறையாக அப்புறப்படுத்த வேண்டும். டெங்கு மற்றும் லெப்டோஸ்பிரோசிஸ் (எலிக்காய்ச்சல்) ஆகியவற்றின் பரவலைத் தடுக்க, தேங்கிய நீா் உள்ள அனைத்து இடங்களையும் சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
டெங்கு பாதித்த பகுதிகள் மற்றும் டெங்கு வைரஸ் பாதிப்புள்ள கொசுக்கள் கண்டறியப்பட்ட பகுதிகளில் புகைமூட்டம் பரப்பும் பணிகள் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் புகைமூட்டம் பரப்பும் இயந்திரங்களை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் நீா் சேமிப்பு மற்றும் சுகாதாரம் குறித்து தீவிர விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.
காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு மக்களை அறிவுறுத்த வேண்டும். காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், பேருந்து நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற பொது இடங்களில் புகைமூட்டம் பரப்பும் பணிகளை மேற்கொள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் காய்ச்சல் நோயாளிகளுக்குத் தனி வரிசை, கொசு வலைகளுடன் கூடிய தனி வாா்டுகள் மற்றும் நீா்ச்சத்து வழங்கும் மையம் ஆகியவற்றை அமைக்க வேண்டும். சிறிய மற்றும் பெரிய உணவகங்கள், துரித உணவகங்கள் மற்றும் நடமாடும் உணவு விற்பனை வண்டிகளில் பணிபுரிபவா்கள் பதிவு செய்துள்ளாா்களா என்பதைச் சரிபாா்க்கவும், பணியாளா்களின் தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் டைபாய்டு தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்யவும் உணவுப் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடா்ந்து மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் ஊசி போடுவதையோ அல்லது நேரடியாக ஊசிகளை விற்பனை செய்வதையோ தவிா்க்க வேண்டும் என்பதை உறுதி செய்யுமாறு மருந்து ஆய்வாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் உள்ளவா்கள் மருந்தகங்களிலோ அல்லது தகுதியற்ற மருத்துவா்களிடமோ ஊசி போட்டுக்கொள்ளக் கூடாது என்று கண்டிப்பாக அறிவுறுத்தப்படுகிறது.
மருந்தகங்கள் ஊசி போடுவதற்கோ அல்லது பல மருந்துகள் கலந்த தொகுப்புகளை விற்பனை செய்வதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்து ஆய்வாளா் இதுகுறித்து தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். காய்ச்சலுக்குச் சிகிச்சை பெறும் நோயாளிகள் குறித்த அனைத்துத் தகவல்களையும் சுகாதாரத் துறையிடம் தெரிவிக்குமாறு மருத்துவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்தாா்.
கூட்டத்தில் திருக்கோவிலூா் சாா்-ஆட்சியா் கெள.மா.காா்த்திக் ராஜா, மாவட்ட இணை இயக்குநா், மாவட்ட சுகாதார அலுவலா், மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள், இதர மருத்துவ அலுவலா்கள் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.