FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

பிரதமருக்கு யூனியன் பிரதேசங்களை பலப்படுத்தும் தொலைநோக்குப் பார்வை: அமித்ஷா பேச்சு

பிரதமருக்கு யூனியன் பிரதேசங்களை பலப்படுத்தும் தொலைநோக்குப் பார்வை உள்ளது என அமித் ஷா பேசியது பற்றி...

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 1:14 pm IST
வண்ண விருதை ஷாலினி சிங்கிடம் வழங்கிய மத்திய அமைச்சர் அமித் ஷா. - படம் - தினமணி
பகிர்:

நாட்டில் யூனியன் பிரதேசங்களை பலப்படுத்தும் தொலைநோக்குப் பார்வை பிரதமர் நரேந்திர மோடிக்கு இருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இரண்டு நாள் பயணமாக சனிக்கிழமை மாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்குச் சென்று அருணாசலேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (ஆக. 9) புதுச்சேரி காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி தேசிய விருதை கோரிமேடு காவல்துறை மைதானத்தில் வழங்கி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அந்த நிகழ்வில் பேசியதாவது:

Advertisement

Advertisement

தமிழர்களின் உயிர்ப்புடையக் கலாசாரம், பாரம்பரிய அடையாளமாக புதுச்சேரி விளங்குகிறது.

மகான் அரவிந்தர், ஸ்ரீ அன்னை ஆகியோர் புதுச்சேரியில் நீண்டகாலம் வாழ்ந்ததால் இயல்பாகவே இங்கு ஆன்மிக விழிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விழிப்பு நிலை நாடு முழுவதும் பரவியுள்ளது. புதுச்சேரியில் வெகுகாலம் தங்கியிருந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தமிழகம் முதல் இமயம் வரை ஒருங்கிணைந்த தேசம் என்ற கனவை முன்னிறுத்தி கவிதைகளை வடித்தது ஊக்கம் அளிப்பதாக இருந்தது. குடியரசுத் தலைவரின் பெருமை மிக்க வண்ணக்கொடி விருது புதுச்சேரி காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது அற்புதமானத் தருணம். நாட்டில் வெகுசில மாநிலங்களுக்கு மட்டுமே இந்தக் கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் இந்த வண்ணக்கொடி விருது மிகவும் பெருமை தரக்கூடியது.

கரோனா பெருந்தொற்று காலத்தில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தீவிரக் கண்காணிப்பு செய்தோம். அப்போது புதுச்சேரி காவல்துறை சிறப்பாகப் பணியாற்றியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சேவை புரிந்தது.

230 ஆண்டுக்கு மேலான பிரெஞ்சு ஆட்சியைத் தாண்டியும் புதுச்சேரி தனது சுயத்தை, தனித்தன்மையை இழந்து விடவில்லை. ஆன்மிக வேர்களை விட்டுவிடவில்லை. 1963 இல் டிஐஜி பதவி அமைக்கப்பட்டது முதல், புதுச்சேரி காவல்துறை உள்நாட்டு, எல்லைப் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட குற்றவியல் சட்டங்களை மாற்றி 3 புதிய குற்றவியல் சட்டங்களை அறிமுகப்படுத்தினார். இந்திய தண்டனைச் சட்டம், நீதி சட்டமாக மாற்றப்பட்டது. குறிப்பிட்ட காலத்தில் நீதி வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்தக் குற்றவியல் சட்டங்கள் தொழில்நுட்பம், குறித்த காலக்கெடு, நம்பிக்கை என்ற 3 தூண்களின் மேல் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், யூனியன் பிரதேசங்களை பலப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டு தொலைநோக்கு பார்வை. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.

ரூ. 2500 கோடியில் சாலை விரிவாக்க திட்டம், ரூ. 2200 கோடியில் காரைக்கால் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம், புதுவை விமான நிலையம் 34 மீட்டர் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

1950 முதல் 2014 வரை புதுச்சேரிக்கு ரூ. 35,000 கோடி மட்டுமே அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் 2014 முதல் 2026 வரை பிரதமர் மோடி அரசு, ரூ.13,762 கோடி வழங்கியுள்ளது. 12 ஆண்டுகளில் 4 மடங்கு நிதியை அரசு புதுச்சேரிக்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ளது. இங்கு கடந்த 9 ஆண்டில் ரூ. 39 ஆயிரம் கோடிக்கு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடியின் அரசு தோளோடு தோள் நின்று புதுச்சேரி யூனியன் பிரதேச வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் உறுதுணையாக இருக்கும் என்று அமித் ஷா தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன், முதல்வர் என். ரங்கசாமி ஆகியோர் பேசினர். புதுச்சேரி காவல்துறை தலைவர் ஷாலினி சிங் வரவேற்றார். புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் நன்றி கூறினார். புதுச்சேரி அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணராவ், பெ.ராஜவேலு, வி.பி. சிவக்கொழுந்து, ஜிஎன்எஸ். ராஜசேகர் மற்றும் எம்எல்ஏக்கள், பொதுமக்கள், காவலர் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

3 அடுக்குப் பாதுகாப்பு

விழா அரங்கத்துக்குள் வருவதற்கு 3 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அனைவரும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

போலீஸ் பேண்ட் குழு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி புதுச்சேரி காவல்துறையின் பேண்ட் குழுவினர் அணிவகுப்பு இசை மற்றும் தேசிய கீதம் உள்ளிட்டவையை இசைத்தனர்.

போலீஸ் அணிவகுப்பு

விழாவுக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதில் ஆயுதப்படை, போக்குவரத்து போலீஸ் உள்ளிட்ட போலீசார் ஈடுபட்டனர்.

சர்வ மத வழிபாடு

முன்பாக சர்வ மத வழிபாடு நடைபெற்றது. இதில் அனைத்து மதத்தையும் சேர்ந்த சான்றோர்கள் பங்கேற்றனர்.

வண்ணவிருது பேட்ச்

குடியரசுத் தலைவரின் வண்ண விருது பேட்ச் இனி புதுச்சேரி போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரின் பேட்சில் இடம் பெறும்.

மயங்கி விழுந்த அணிவகுப்பு போலீஸார்

காலையிலேயே வெயில் சுட்டெரித்தது. அணிவகுப்பு மரியாதையின்போது, சுமார் 12 போலீசார் மயங்கி விழுந்தனர்.

பதக்கம்

சிறப்பான நிர்வாகத் திறன், பணியில் சிறந்த செயல்திறன் மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய சேவையைப் பாராட்டும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முதுநிலை போலீஸ் கண்காணிப்பாளர்கள் ஆர். கலைவாணன், லட்சுமி சவுஜன்யா ஆகியோருக்கு பதக்கம் வழங்கினார்.

summary

Union Home Minister Amit Shah has stated that Prime Minister Narendra Modi has a vision to strengthen the Union Territories in the country.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments