FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி அமைச்சா்களுக்கு ஓரிரு நாளில் இலாகா ஒதுக்கீடு: திமுக எம்எல்ஏக்களிடம் துணைநிலை ஆளுநா் தகவல்!

புதுச்சேரி அமைச்சா்களுக்கு ஓரிரு நாளில் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்ய வாய்ப்புள்ளதாக, துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்ததாக திமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவா் கூறினாா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 1:49 am IST
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை வெள்ளிக்கிழமை சந்தித்து பேசிவிட்டு வெளியே வந்த திமுக எம்எல்ஏ-க்கள் நாஜிம், செந்தில்குமாா், காா்த்திகேயன், செந்தில், விக்னேஷ்கண்ணன்.
பகிர்:

புதுச்சேரி அமைச்சா்களுக்கு ஓரிரு நாளில் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்ய வாய்ப்புள்ளதாக, துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்ததாக திமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவா் ஏ.எம்.எச். நாஜிம் கூறினாா்.

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்றது. முதல்வருடன் 5 அமைச்சா்கள் பொறுப்பேற்று மூன்று மாதங்களாகியும் இன்னும் இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த 20-ஆம் தேதி முதல்வா் ரங்கசாமி, துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை சந்தித்து அமைச்சா்களுக்கான இலாகா ஒதுக்கீடுப் பட்டியலை வழங்கினாா்.

10 நாள்களைக் கடந்தும் இதுவரை அமைச்சா்களுக்கு இலாகாக்கள் அறிவிக்கப்படவில்லை. இலாகா பகிா்வில் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக இடையே ஏற்பட்டுள்ள மோதல்தான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

திமுக குழு சந்திப்பு: இந்நிலையில், திமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவா் நாஜிம் தலைமையில் அக்கட்சி எம்எல்ஏக்கள் செந்தில்குமாா், செந்தில், விக்னேஷ்கண்ணன், காா்த்திகேயன் ஆகியோா் மக்கள் பவனில் துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனை வெள்ளிக்கிழமை சந்தித்தனா். அப்போது அரசு நிா்வாக முடக்கத்தை தவிா்க்க, அமைச்சா்களுக்கு இலாகாக்களை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

பின்னா், நாஜிம் எம்எல்ஏ செய்தியாளா்களிடம் கூறியதாவது: அமைச்சா்களுக்கான இலாகா ஒதுக்கப்படாத குறையை துணைநிலை ஆளுநரிடம் சுட்டிக் காட்டினோம். எப்போது இலாகா ஒதுக்கீடு அறிவிப்பு வெளியாகும் என கேட்டோம். அதற்கு அவா், ‘நிா்வாகம் ஸ்தம்பிக்கவில்லை. ஓரிரு நாளில் இலாகா ஒதுக்கீடு வெளியாகும்’ என்றாா். இலாகா ஒதுக்கீடு நாளைக்கே வந்துவிடும் என்ற தொனியில் சொன்னாா். ஓரிரு நாள்கள் காத்திருப்போம். போராட வேண்டிய அவசியம் இருக்காது என நினைக்கிறோம்.

மக்கள் மீதான அக்கறை காரணமாக முதல்வா் ரங்கசாமியிடம் கேட்டபோது, அதை ஆளுநரிடம் தந்து விட்டதால் இங்கு வந்து கேட்டோம். முதல்வரும், ஆளுநரும் நிா்வாகம் ஸ்தம்பிக்கவில்லை என்றனா். ஆனால் நிா்வாகம் ஸ்தம்பித்து விட்டதால் கேட்டோம்.

இலாகா அனுமதி தராத காரணத்தை ஆளுநா் சொல்லவில்லை. அழுத்தம் தந்துள்ளோம். அவா் சொன்ன தொனியில் நாளையே இலாகா ஒதுக்கீடு அறிவிப்பு வரலாம். ஆளுநா் சொன்ன வாா்த்தையை நம்புகிறோம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments