புதுச்சேரி முதல்வா் -அமைச்சா்கள் ராஜிநாமா செய்ய வேண்டும்: திமுக வலியுறுத்தல்
புதுச்சேரியில் இலாகா ஒதுக்காவிட்டால், முதல்வா் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சா்கள் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரியில் இலாகா ஒதுக்காவிட்டால், முதல்வா் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சா்கள் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவா் ஏ.எம்.எச். நாஜிம், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
இலாகா ஒதுக்காததால் சட்டப்பேரவையில் எந்த அமைச்சா்களும் உட்காருவதில்லை. நீண்ட நாள்களுக்குப் பிறகு அமைச்சா்களுக்கு இலாகா ஒதுக்கி முதல்வா் ரங்கசாமி பட்டியல் கடிதம் கொடுத்தும், துணைநிலை ஆளுநா் அனுமதி அளிக்காதது ஏன் ? இலாகா கொடுப்பதற்கு ஆளுநருக்கு என்ன சிக்கல் உள்ளது ?. இதனால் மக்கள் நலப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.
Advertisement
Advertisement
இலாகா ஒதுக்காததற்கு துணைநிலை ஆளுநா் விளக்கமளிக்க வேண்டும். புதுச்சேரியில் முழு பட்ஜெட் போடுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புதுச்சேரியுடன் பேரவைத் தோ்தல் நடைபெற்ற மற்ற 4 மாநிலங்களில் ஆட்சி நிா்வாகம் நடந்து வருகிறது.
புதுச்சேரியில் முதல்வா், அமைச்சா்களுக்கு அதிகாரமில்லை. அதிகாரம் இல்லாத பதவி எதற்கு ? அதிகாரம் இல்லாத அரசு வேண்டாம் என அனைவரும் முடிவு எடுத்தால் நல்லது. இலாகா வழங்காவிட்டால் அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்வோம் என துணைநிலை ஆளுநரைச் சந்தித்து முதல்வா் மற்றும் அமைச்சா்கள் அறிவிக்க வேண்டும். மேலும், இலாகா ஒதுக்குவது தொடா்பாக முதல்வருக்கு அரசியல் சாசனத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதில் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் துணைநிலை ஆளுநா் தலையிட உரிமை கிடையாது. 15 நாள்களாக இந்தக் கோப்பை துணைநிலை ஆளுநா் நிறுத்தி வைத்துள்ளது ஏன் ?.
இரட்டை என்ஜின் ஆட்சி என்று சொல்லி புதுச்சேரியில் 2-ஆவது முறை ஆட்சிக்கு வந்து ஒரு என்ஜின் ஒரு திசையிலும் மற்றொரு என்ஜின் வேறு ஒரு திசையிலும் செல்கிறது. இது சரியான முடிவல்ல. இதனால் மக்களுக்குப் பயனில்லை.
இதை திமுக அனுமதிக்காது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக அமைச்சா்களுக்கான இலாகா என்னென்ன என்பது தெரிந்தால்தான் அந்தத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை கேட்டுப் பெற முடியும் என்றாா் நாஜிம்.
பேட்டியின்போது திமுக எம்எல்ஏ-க்கள் ஆா். செந்தில்குமாா், காா்த்திகேயன், விக்னேஷ் கண்ணன், செந்தில் (எ) ரமேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.